

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று சேலத்தில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.
வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் தமிழகத்தில் குளிர் அதிகரித்தது. நிலப்பகுதியைப் பொருத்தவரை திருத்தணியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. இந்நிலையில், தற்போது குளிர் குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, இது நாள் வரை வடக்கிலிருந்து தமிழகம் நோக்கி வீசிய காற்றும், வங்கக் கடலில் இருந்து தமிழகத்தை நோக்கி வீசிய காற்றும் தற்போது நின்றுள்ளது. இது பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறும் இயல்பான நிகழ்வுதான். தற் போது தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி காற்று வீசுகிறது. இதனால் தமிழகத்தில் குளிர் குறைந்து வெப்பம் அதிகரித்துள்ளது. நேற்று மாலை 5.30 மணி நில வரப்படி, அதிகபட்சமாக சேலத் தில் 39 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. தருமபுரி, திருப்பத்தூரில் தலா 38 டிகிரி செல்சியஸ், மதுரை, சென்னை, பாளையங்கோட்டை, வேலூரில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்றார்.