

தளி அருகே ஆண் யானை மர்மமான முறையில் உயிரிழந்தது. மின்சாரம் தாக்கி யானை இறந்ததா என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தாசரப்பள்ளி கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 4 யானைகள் உணவுக்காக வந்தன. அதில் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று சூரிய நாராயணன் என்பவரின் விளை நிலத்தில் நேற்று காலை இறந்து கிடந்தது.
தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், ஜவளகிரி வனச்சரகர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதையடுத்து வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர், யானையின் உடலைப் பரிசோதித்தனர்.
அப்போது யானையின் கால் பகுதியில் லேசான காயம் இருந்தது. தும்பிக்கையில் காயமும், வாயில் நுரை தள்ளிய நிலையிலும் இறந்து கிடந்தது. யானையின் உடல் அந்த இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் அருகில் பொக்லைன் மூலமாக குழி தோண்டி புதைக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘வனப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியர் மூலமாக தாசரப்பள்ளியில் மர்மமான முறையில் யானை இறந்து கிடப்பது தெரியவந்தது. 12 வயது முதல் 15 வயது மதிக்கத்தக்க இந்த ஆண் யானை மின்சாரம் தாக்கி இறந்திருக்க வாய்ப்புள்ளது.
ஏனெனில் மாந்தோப்பில் மா மரங்களின் அருகே மின் கம்பி இணைப்பு செல்கிறது. ஆகவே மாம்பழம் பறிக்கும் போது மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்துள்ளதா அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மற்றும் ஆய்வு நடைபெற்று வருகிறது,’’ என்றார்.