

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்ப தாலும், வெப்பச்சலனம் காரண மாகவும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக் கல்லாறில் 130 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார் 12 மி.மீ., நடுவட்டம் 11 மி.மீ., நெல்லை மாவட்டம் பாபநாசம், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தலா 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியார் மற்றும் வால்பாறையில் தலா 50 மி.மீ., பெரும்புதூர், தாம்பரம், கீழ் கோதையாறு, பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
“தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத் துடன் காணப்படும். சில பகுதி களில் ஒன்றிரண்டு தடவை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்று முன் தினம் இரவுமுதலே மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. தூறல் விழுந்து கொண்டே இருந்ததால் சென்னை ஊட்டி போல குளிர்ச்சியாகக் காணப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தொடர் மழை காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் சற்று பாதித்தது.
நீர்வரத்து அதிகரிப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. பூண்டி ஏரிப் பகுதியில் 25.2 மி.மீ., சோழவரம் ஏரிப் பகுதியில் 22 மி.மீ., புழல் ஏரிப் பகுதியில் 23 மி.மீ., செம்பரம்பாக்கம் ஏரிப் பகுதியில் 25 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. புழல் ஏரிக்கு விநாடிடிக்கு 21 கன அடி வீதமும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 440 கன அடி வீதமும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடி. நேற்றைய நிலவரப்படி 4 ஆயிரத்து 338 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. கடந்தாண்டு இதே நாளில் 4 ஏரிகளிலும் ஆயிரத்து 318 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
“தற்போதைய நீர் இருப்பைக் கொண்டு அடுத்த 4 மாதங்களுக்கு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்” என்று சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.