

பொள்ளாச்சி சாலையைப் போலவே சத்தி சாலையிலும் அதிவேகத்தில் தனியார் பேருந்துகள் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து கோவையில் 3 முக்கியச் சாலைகளில் வேகக் குறைப்பு நடவடிக்கைகளை போலீஸார் தொடங்கியுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து பழநி, உடுமலை, பொள்ளாச்சி, கோவை, சத்தியமங்கலம் வழியாக தேசிய நெடுஞ்சாலை (209) செல்கிறது. இதில், பொள்ளாச்சியிலிருந்து சத்தியமங்கலம் வரையிலான பாதை மட்டும் குறுகலாக இருந்து வந்தது. மேலும், இந்த இடைப்பட்ட பகுதியில் அதிக அளவில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதால் விபத்துகளும் அதிகரித்து வந்தன.
இந்நிலையில், பலகட்ட போராட்டத்துக்குப் பிறகு பொள்ளாச்சி முதல் கோவை வரை சாலை விரிவாக்கப் பணி தற்போது தொடங்கியுள்ளது.
31 பேருந்துகள்
விரிவாக்கப் பணிகள் நடக்கும்போதே, மேடு, பள்ளங்கள் நிறைந்த பொள்ளாச்சி சாலையில் இரு தனியார் பேருந்துகள் போட்டிபோட்டுக் கொண்டு அசுர வேகத்தில் பயணித்த வீடியோ கடந்த வாரம் வெளியானது. இந்த சம்பவத்தை விசாரித்த அதிகாரிகள், அதிவேகமாக இயக்கிய 31 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்தனர். 2 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு, பொள்ளாச்சி சாலையில் பேருந்துகள் நிதானமாகச் சென்று வருவதால் பயணிகள் நிம்மதி அடைந்திருந்தனர்.
இந்நிலையில், கோவை - சத்தி சாலையில் நேற்று முன்தினம் இரவு மற்றொரு தனியார் பேருந்து அதேபோல அசுர வேகத்தில் சென்று மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது. முழு சாலையையும் பேருந்து அடைத்துக் கொண்டு சென்றதால், எதிரே வந்த வாகனங்கள் சாலையோரமாக இறங்கி தப்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பேருந்தின் அத்துமீறலை, அதன் பின்னே சென்ற வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். தனியார் பேருந்தின் வேகத்தைக் கண்டித்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து கோவை மாவட்ட காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நடவடிக்கைக்கு உத்தரவு
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.வி.ரம்யா பாரதியிடம் கேட்டபோது, ‘பொள்ளாச்சி சாலையைப் போலவே சத்தி சாலையிலும் பேருந்துகள் அத்துமீறுவதாக தகவல் கிடைத்தது. அதுகுறித்து வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பு, நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பேருந்து உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளோம்’ என்றார்.
தனியார் பயணிகள் பேருந்துகள் அதிகமாக இயக்கப்படும் கோவை - பொள்ளாச்சி, கோவை - சத்தி, கோவை - மேட்டுப்பாளையம் சாலைகளில் வேகக் கட்டுப்பாட்டு நடவடிக்கையை போலீஸார் தொடங்கியுள்ளனர். பொள்ளாச்சி சாலையில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால், பிரச்சினைகள் ஓரளவுக்கு குறைந்துள்ளன. இருப்பினும், பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளும், கிணத்துக்கடவு போலீஸாரும் பேருந்துகளின் வேகத்தை கண்காணித்து வருகிறார்கள். இதன் அடுத்தகட்டமாக சத்தி சாலையில் கோயில்பாளையம், அன்னூர் ஆகிய இடங்களில் அந்தந்த காவல்நிலைய போலீஸார் மூலமாக பேருந்துகளின் வேகம் கண்காணிக்கப்படுகிறது. அதேபோல மேட்டுப்பாளையம் சாலையிலும் முன்னறிவிப்பு இல்லாத, அடிக்கடி மாறக்கூடிய வகையில் 3 இடங்களில் சோதனையை மேற்கொண்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.
போலீஸார் கூறும்போது, ‘அவிநாசி சாலை விரிவுபடுத்தப்பட்ட நிலையில் இருப்பதால் இதுபோன்ற கண்காணிப்புக்கு அவசியம் இல்லை. குறுகலாக உள்ள பொள்ளாச்சி, சத்தி, மேட்டுப்பாளையம் சாலைகளை மட்டுமே கண்காணிக்க வேண்டிய சூழல் உள்ளது. வீடியோவாக மக்கள் பதிவு செய்யும் சம்பவங்கள் போலீஸாருக்கு அழுத்தத்தை கொடுக்கின்றன. வேறு வழியின்றி நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது’ என்றனர்.