Published : 25 Nov 2013 09:00 AM
Last Updated : 25 Nov 2013 09:00 AM

ஏற்காட்டில் அதிமுக, திமுக வேட்டி, சேலை விநியோகம்: தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி

ஏற்காடு தொகுதியில் உள்ள பெண் வாக்காளர்களைக் கவர, காவல் துறையின் சோதனைகளையும் மீறி ஆளுங்கட்சியினர் சேலை விநியோகம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் நோக்கில் அயோத்தியாப்பட்டணம், சோமம்பட்டி, முத்தம்பட்டி உள்ளிட்ட ஏராளமான இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து தீவிர வாகன தணிக்கையில் வருவாய் துறை மற்றும் காவல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

முறையான ஆவணங்களின்றி வியாபாரிகள், பொதுமக்கள் கொண்டு செல்லும் பணமும் பறிமுதல் செய்யப்படுகிறது. தேர்தல் ஆணையம் உத்தரவால், ஏற்காடு தொகுதிக்குள் வரும் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்களின் வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன.

பலத்த பாதுகாப்பையும் மீறி, ஆளும், எதிர் அணிகள் பணம், பரிசுப் பொருட்களை அளிக்கத் திட்டம் வகுத்து, அதற்கானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

அயோத்தியாப்பட்டணத்துக்கு உட்பட்ட தாதனூர், ஆச்சாங்கு ட்டப்பட்டி, வலசையூர், மன்னார்பா ளையம், பருத்திக்காடு உள்ளிட்ட பகுதியில் ஆளுங்கட்சியினர் இரவோடு இரவாக வீடு வீடாகச் சென்று சேலை விநியோகம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. ஏற்காடு தொகுதியில் ஆண் வாக்காளரைக் காட்டிலும் பெண் வாக்காளர்கள் 10,000 பேர் கூடுதலாக உள்ளனர்.

பெண்களின் வாக்குகள்தான், வெற்றியை நிர்ணயிக்கும் என்பதால், அப்பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மூலம் வீடு வீடாகச் சென்று 250 ரூபாய் மதிப்புள்ள சேலைகளை பெண்களுக்கு வழங்கி வரும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையறிந்த தி.மு.க.வினரும் வேட்டி, சேலை அளித்து வாக்காளரை கவர்ந்திடும் திட்டத்தில் உள்ளனர்.

முதல்கட்டமாக வேட்டி, சேலையும், தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கவும் வாய்ப்புள்ளது.

தொகுதிக்குள் உள்ள ஜவுளி கடைகள் மூலம் கொள்முதல் செய்து வாக்காளர்களுக்கு வழங்கலாம் எனத் தெரிகிறது. ஏற்காடு தொகுதியில் 33 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்துள்ள நிலையில் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வது தேர்தல் அதிகாரிகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

எங்கோ தவறு நடந்துள்ளது

வேட்டி, சேலை விநியோகம் குறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரி க.மகரபூஷணத்திடம் கேட்டபோது, “சனிக்கிழமை இரவுகூட வலசையூர், அயோத்தியாபட்டிணத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தேன்.

இங்கு 4 தாசில்தார்கள் தலைமையில் 12 அதிகாரிகள் கொண்ட குழு தேர்தல் கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்காடு தொகுதி முழுவதும் 233 அலுவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 'சூப்பர் செக்' எனப்படும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

இத்தனை கண்காணிப்பு மற்றும் சோதனைகளையும் மீறி ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்துள்ளது. அதை கவனத்தில் கொள்கிறோம். பத்திரிகையாளர்களும் எங்க ளுக்கு ஒத்துழைப்பு அளித்தால்

இதுபோன்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x