

சாலைப்பணி மந்தகதியில் நடைபெறுவதால் ராமவர்மன் சிறை கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழித்துறை அருகே பளுகல் ஊராட்சியில் உள்ளது ராமவர்மன்சிறை கிராமம். இந்த பகுதியில் செல்லும் சாலை, தமிழக - கேரள எல்லையான மேல்பாலை -காரக்கோணத்தை இணைக்கிறது. இதில், பூம்பள்ளிகோணத்தில் இருந்து ராமவர்மன்சிறை வரை சாலையை சீரமைக்க ரூ.16 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின. இதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்னர் சாலையின் குறுக்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன.
ஆனால், அதன்பின்னர் பணிகள் எதுவும் நடைபெற வில்லை. இப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நடவடிக்கை இல்லை
அப்பகுதியை சேர்ந்த பார்வதி கூறும்போது, “சாலையில் ஜல்லியைக் கொண்டுவந்து கொட்டிய பிறகு இங்கு பள்ளி வாகனங்கள் கூட வரவில்லை. இதனால் மாணவர்கள் அதிக தூரம் நடந்து சென்று பள்ளி வாகனத்தில் ஏறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சாலை சீரமைப்பதில் மெத்தனம் காட்டுவதால் ஆலஞ்சிவிளை, சூரம்குழி, பூம்பள்ளிகோணம், பெருவிளை பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை” என்றார் அவர்.
ஆட்சியருக்கு மனு
இதனிடையே அப்பகுதி மக்கள் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் தார்த்தளம் அமைக்கும் கலவை தயாரிப்பு நிலையம் அனுமதியின்றி செயல்பட்டு வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், நீதிமன்றத்தை அணுகி உத்தரவு பெற்றதால் அந்த ஆலை மூடப்பட்டது. அதனால் தான் சாலையில் போக்குவரத்தை பாதிக்கும் வகையில் ஜல்லியைக் கொட்டி வைத்துள்ளதாக சந்தேகிக் கிறோம். ஒப்பந்ததாரர் உரிய நேரத்தில் பணி செய்யாததன் காரணம் என்ன என்பதை விசாரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம், மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் அறிக்கை கேட்டுள்ளார்.