

சென்னை கலவரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு சட்டப்பாதுகாப்பு பெற வேண்டும், தமிழர்களின் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்குடன் தொடங்கப்பட்ட மாணவர்களின் போராட்டம் விரும்பத்தகாத வன்முறை மற்றும் அடக்குமுறையுடன் துயர முடிவுக்கு வந்திருப்பது வருத்தமளிக்கிறது.
சென்னையில் போராட்டத்தின் போது வெடித்த வன்முறைகளுக்கு மாணவர்கள் காரணம் அல்ல. சென்னை வடபழனியில் வாகனங்களை தாக்கியும், எரித்தும் வன்முறை செயல்களில் ஈடுபட்ட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மாணவர்கள் இல்லை என்றும், சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியைச் சேர்ந்த இவர்கள், அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமூக விரோதிகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் காவல்துறையினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். பெண் காவலர் ஒருவர் குடிசை மீது தீ வைப்பதும், இன்னொரு இடத்தில் காவலர் ஒருவர் ஆட்டோவை தீ வைத்து எரிக்கும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. வன்முறைகளை திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்டவர்கள் காவல்துறையினரும், சமூக விரோத சக்திகளும் தான் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன.
எனவே, சென்னைக் கலவரங்கள் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்க சிபிஐ விசாரணைக்கும், பணியிலுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கும் ஆணையிட வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.