

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி தளங்களில் போதிய வசதியின்றி மீனவர்கள் சேற்றில் சிக்கித் தவிக்கும் நிலையை மாற்ற மீன்பிடி இறங்குதளம் அமைக்க வேண்டுமென நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடியில் தொடங்கி அரசங்கரை வரை சுமார் 40 கிலோமீட்டர் தொலைவு கடலோரப் பகுதியாக உள்ளது. இங்கு கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய விசைப்படகு மீன்பிடி தளங்களில் இருந்து சுமார் 550 விசைப்படகுகளில் சுமார் 2,000 மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர, கடலோரத்தில் 32 இடங்களில் சுமார் 50 முதல் 500 படகுகள் வரை என மொத்தம் 4,000 நாட்டுப்படகுகளில் 12,000-த்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
பிரதான சாலைகளில் இருந்து நாட்டுப்படகு மீன்பிடி தளங்களுக்குச் செல்வதற்கு சாலை வசதி, படகுகளை கரைகளில் நிறுத்துவதற்கேற்ற தளம் ஆகியவை இல்லாததால் கரையில் இருந்து வெகு தொலைவில் படகுகளை நிறுத்த வேண்டியுள்ளது.
மேலும், பிடித்துவரப்படும் மீன்களை வலையில் இருந்து பிரித்தெடுக்கவும் மற்றும் வலைகளைச் சுத்தம் செய்வதற்கும் வசதி இல்லாததால் அசுத்தமாக காணப்படும் கடற்கரையிலேயே இப்பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. குடிநீர், மின்விளக்குகூட இல்லாததால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம் என புகார் தெரிவிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள், தங்கள் பகுதிகளில் மீன்பிடி இறங்குதளம் அமைத்துக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மீனவர் அந்தோணிராஜ் கூறியபோது, “நாட்டுப்படகு மீனவர்கள் தங்களது வலைகளை விரித்து மீன்களை பிடித்துவருவதால் கடல்வளம் பாதிக்கப்படுவதில்லை. அதிகமான மீனவர்கள் நாட்டுப்படகு மூலம் தொழில் செய்துவரும் நிலை இருந்தும்கூட அரசு எங்களைக் கண்டுகொள்ளவில்லை.
இயற்கையால் படைக்கப்பட்ட கடல் இருக்கிறது. அதில், எங்களின் படகு மூலம் தொழில் செய்து வருகிறோம். அன்றாடம் பிழைப்பு நடக்கிறது என்பதைத் தவிர, வேறெந்த வசதியும் இல்லை. மீன்பிடி தளங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் தொழிலுக்கு கிளம்பும் மீனவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். அதேபோல, குடிநீர் வசதியும் இல்லை. இந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்க்க வேண்டுமென்றால் அனைத்து மீன்பிடி தளங்களிலும் அந்தந்தப் பகுதியில் தொழில் செய்துவரும் நாட்டுப்படகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்பட மீன்பிடி இறங்கு தளங்களை அமைக்க வேண்டும்” என்றார்.
(ஜெகதாபட்டினம் இறங்குதளத்தில் சேற்றில் நடந்துவரும் மீனவர்கள். (அடுத்த படம்) சேறும் சகதியுமாக உள்ள தரையில் வலையில் இருந்து மீன்களைப் பிரிக்கும் மீனவர்கள்.)
ஆழப்படுத்துவதுடன் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்...
மீனவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கேட்டபோது மீன்வளத் துறையினர் கூறியது: மீன்பிடி இறங்குதளங்களில் கடற்கரையில் படகுகளை நிறுத்துவதற்கேற்ப ஆழப்படுத்தி தடுப்புச் சுவர் கட்டப்படும். சிமென்ட் தளம் அமைக்கப்படும். மீன் ஏலம் விடுதல், வலைகளை உலர்த்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள பிரத்யேகமான வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை, வங்கி போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் விசைப்படகு மீன்பிடி தளங்களும், முத்துக்குடா மற்றும் ஆர்.புதுப்பட்டினத்தில் நாட்டுப்படகு மீன்பிடி தளங்களில் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், நபார்டு வங்கி நிதியில் புதுக்குடி மற்றும் கட்டுமாவடி உள்ளிட்ட இடங்களில் ரூ.9.4 கோடியில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உத்தரவு வந்ததும் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.
அரிப்பு நோயால் மீனவர்கள் பாதிப்பு
இதுகுறித்து கட்டுமாவடி நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் பி.முருகையன் கூறியபோது, “புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லையில் உள்ள இந்த நாட்டுப்படகு மீன்பிடி தளத்தில் இருந்து சுமார் 70 நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது.
இங்குள்ள மீன்சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து வியாபாரிகள் மீன்களை வாங்கிச் செல்வதால் இந்த மீன்சந்தை எப்போதும் களைகட்டியிருக்கும்.
இந்நிலையில், இங்குள்ள ராமர் கோயிலில் இருந்து மீன்பிடி தளம் வரை 1 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை உள்ளது. கடல் உள்வாங்கும் சமயங்களில் மீன்பிடி தளத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில்தான் படகுகளை நிறுத்த வேண்டும். இதற்கு இடைப்பட்ட இடத்தில் பாசி படர்ந்துள்ளதால் அதன்வழியே வலை, ஐஸ் பெட்டிகளை கொண்டுசெல்லும் மீனவர்களுக்கு அரிப்பு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இது, கடலில் மீன்பிடித்துக் கொண்டு திரும்புவதில் உள்ள சிரமத்தைவிட கூடுதலாக தெரிகிறது. இதனைத் தவிர்க்க, இங்கு மீன்பிடி தளம் அமைக்க வேண்டும்.
ராமர் கோயில் வாசலில் இருந்து மீன்பிடி தளம் வரை உள்ள தார்சாலையோரத்தை ஆழப்படுத்தி படகுகளை நிறுத்துவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.
முதல்வர் அறிவிக்காததால் ஏமாற்றம்
ஜெகதாப்பட்டினம் கம்மாக்கரை கடல் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் கோ.ஜெயபால் கூறியபோது, “ஜெகதாப்பட்டினத்தில் உள்ள நாட்டுப்படகு மீன்பிடி தளத்தில் சுமார் 400 நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த மீன்பிடி தளத்துக்குச் செல்ல சாலை வசதி இல்லை.
அதேபோல, கரையோரங்களில் போதிய ஆழம் இல்லாமல் சேறும், சகதியுமாக இருப்பதால் கரையிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் படகுகளை நிறுத்த வேண்டியுள்ளது. இதனால் படகுகளுக்கும், கரைக்கும் இடையே சென்றுவரும்போது சேற்றில்தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் மீன் முள், முட்களுடன்கூடிய சங்கு உள்ளிட்டவற்றால் மீனவர்களின் கால்களில் காயம் ஏற்படுகிறது.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி தளங்களில் படகுகளை கரைகளில் நிறுத்துவதற்கேற்ப மீன்பிடி தளங்களை ஆழப்படுத்த வேண்டும். கரையோரங்களில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். மேலும், மீன்பிடி தளங்களுக்குச் சென்றுவர சாலையும், மீன் மற்றும் வலைகளை உலர்த்த சிமென்ட் தளங்களும் அமைக்க வேண்டும். சட்டப்பேரவையில், 5 மீன்பிடி இறங்கு தளங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வர், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு என அவற்றில் ஒன்றைக்கூட அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது” என்றார்.