

தமிழகத்தில் ஊழலை ஒழித்து உலகிலேயே சிறந்த மாநிலமாக்க பல்வேறு சமூகத்தினரும் பாஜக வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்தார்
தேவேந்திரகுல வேளாளர் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா நேற்று மதுரை வந்தார். அவரை பல்வேறு ஜாதிசங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். இவர்க ளிடையே அமித்ஷா பேசியதாவது:
பல்வேறு ஜாதிசங்க நிர்வாகிகள் ஏராளமான கோரிக்கைகளை அளித்துள்ளீர்கள். இவற்றை உரியமுறையில் கொண்டு சென்று நிறைவேற்ற அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழகத்தில் ஜாதியின் அடிப்படையில் சமுதாயம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. ஜாதிகளுக்கு இடையிலான பிரச்சினைகளை எல்லாம் நீக்கிவிட்டால் சமுதாயம் வளர்ந்து பெரும் பலனடையும்.
பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலான அரசு நாட்டை வளப் படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்கிறது. இதற்காகத்தான் பாஜக வுக்கு 282 நாடாளுமன்ற உறுப் பினர்களைக் கொடுத்து மக்கள் மிகப்பெரிய ஆதரவை அளித் துள்ளனர். தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் பாஜகவை வளர்க்க பெரும் முயற்சி எடுத்து வருகிறோம். தமிழகத்தில் கட்சி உறுப்பினர் சேர்க்கைக்கு நல்ல ஆதரவு உள்ளது. ஊழல் மாநிலங்களில் தமிழகம் உயர்நிலையிலுள்ள சூழ்நிலை யுடன் நிலவுகிறது. தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி வர வேண்டும் என்பதே என் விருப்பம்.
பல்வேறு சமுதாயத்தினரும் இந்த இயக்கத்தில் இணைந்தால், தூய்மையான நிர்வாகம் உள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்றும் முயற்சியில் விரைந்து செயலாற்று வோம். ஊழலும், முன்னேற்றமும் ஒன்றாக செல்ல முடியாது. ஊழல் உள்ளபோதே தமிழகம் இந்தளவு முன்னேறியுள்ளது. ஊழலை ஒழித்துவிட்டால் தமி ழகம் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே சிறந்த மாநிலமாகத் திகழும். அப்போது தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணையும் வாய்ப்பும் உருவாகும் என்றார்.
பாஜக தேசிய பொதுச் செயலர் முரளிதர்ராவ், தேசியச் செயலர் எச்.ராஜா, தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன், சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில துணை அமைப்பாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அமித்ஷாவை சந்தித்த ஜாதிசங்க நிர்வாகிகள்
நாடார் மகாஜன சங்கம் சார்பில் கரிக்கோல்ராஜ், பெரீஸ் மகேந்திரவேல், ரெட்டி நலச் சங்கம் சார்பில் ஜி.ரங்கநாதன், பட்டாபிராம், ராமலிங்கம், யாதவர் சங்கம் சார்பில் கோபாலகிருஷ்ணன், கபிலன், சரவணன், நாயுடு சங்கம் சார்பில் ஜெயக்குமார், தேவர் தேசிய பேரவை சார்பில் திருமாறன், மருதுபாண்டியர் பேரவை சார்பில் கண்ணன், அனைத்து பிள்ளைமார் மகாசபை நிறுவன தலைவர் ஆறுமுகம், சவுராஷ்டிரா சமூக நல பேரவை சார்பில் ஜவஹர்லால், செட்டியார் சமூகம் சார்பில் சிவானந்த சீனிவாசன் உட்பட பலர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் அஇமூமுக தலைவர் டாக்டர் என்.சேதுராமன், வேலம்மாள் கல்வி நிறுவன தலைவர் எம்வி.முத்துராமலிங்கம், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகர் உட்பட பலர் தனித்தனியே சந்தித்தனர்.