

ஆதார் அட்டை பெறுவதற்கான முகாம்கள் தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகின்றன. அதன் பிறகு, மாவட்டங்களில் அமைக்கப்படும் நிரந்தர மையங்களில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மத்திய கணக் கெடுப்புத் துறையின் சார்பில் குடியிருப்புப் பகுதிகளில் நடை பெற்று வரும் முகாம்களில் இதுவரை தமிழகத்தில் 73.7 சதவீதம் (4,96,90,496) பேர் ஆதார் அட்டைக்காக பதிவுசெய்துள்ளனர். அதில், 69.49 சதவீதம் (4,68,47,994) பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலேயே மிகக் குறைந்த அளவாக சென்னையில் இதுவரை 62.33 சதவீதம் பேர் மட்டுமே பதிவுசெய்துள்ளனர். பெரம்பலூரில் அதிகபட்சமாக 89.23 சதவீதம் பேர் பதிவுசெய்துள்ளனர். மேலும் 5 மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் பதிவுசெய்துள்ளனர்.
ஆதார் அட்டைக்கான பதிவுகள் இரண்டு சுற்றுகளில் நடைபெறு கின்றன. முதல் சுற்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று முடிந்து விட்டது. இரண்டாவது சுற்று ஐந்து மாவட்டங்களில் முடிந்துள்ளது, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் 12 மாவட்டங்களில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இது குறித்து கணக்கெடுப்பு துறையின் இணை இயக்குநர் கிருஷ்ணா ராவ் கூறுகையில், “தமிழகத்தில் இரண்டாம் சுற்று முகாம்கள் முடிந்த பிறகு, தாலுகா அளவில் தமிழக அரசு சார்பில் நிரந்தர மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த மையங்களில் இருக்கும் அதிகாரி களிடம் எப்போது வேண்டுமானா லும் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள லாம்”என்றார்.
ஆதார் அட்டைகள் பதிவுக்கான முகாம் தங்கள் வீடுகளுக்கு அருகில் எங்கு நடைபெறுகிறது என்பதை மண்டல அல்லது தாலுகா அலுவலகங்களில் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் தொகைபதிவேடு (என்.பி.ஆர்) 2010-ல் பதிவு செய்யப்பட்டதற்கான ரசீதை எடுத்து செல்ல வேண்டும். அதில் உள்ள தகவல்கள் சரி பார்க்கப்பட்ட பிறகு, ஆதார் அட்டைக்கான பயோ மெட்ரிக் எடுக்கப்படும்.
என்.பி.ஆர் சீட்டை தொலைத்தவர்கள், அல்லது என்.பி.ஆர்-ல் ஏற்கெனவே பதிவு செய்யாதவர்கள் புதிதாக என்.பி.ஆர்-ல் பதிவு செய்ய வேண்டும். அதற்கான விண்ணப்பங்களை நகரத்தில் இருப்பவர்கள் மண்டல அலுவலகத்திலும் கிராமங்களில் இருப்பவர்கள் தாலுகா அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மண்டல அல்லது தாலுகா அலுவலகத்திலேயே சமர்ப்பித்து அதற்கான சான்றை பெற்றுக் கொள்ள வேண்டும்.