

கோவை மாவட்டத்தின் மேற்கு மலைத் தொடரில் அடர்த்தியான வனமும், தேயிலைத் தோட்டங் களும் நிறைந்த பகுதி வால்பாறை. அங்குள்ள சின்கோனா கிராமத்தில் சுமார் 50 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடும்பங்கள் வசிக் கின்றன. காப்புக் காடாக இருப்ப தால் சாலை, போக்குவரத்து, வன விலங்குகள் அச்சுறுத்தல் என பல்வேறு பிரச்சினைகள் இங்கு சூழ்ந்து கிடக்கின்றன. இப்படியான சூழலில் வாழும் குழந்தைகளை, வனச்சூழலைக் காக்கும் சூழலியலாளர்களாக உருவாக்கி வரு கிறது சின்கோனா அரசு உயர் நிலைப் பள்ளி.
பள்ளியைச் சுற்றியுள்ள இயற்கை சூழலில் பறவைகள் கணக்கெடுப்பு, பறவைகள் கண் காணிப்பு, பறவைகள் குறித்து ஆய்வு செய்வது போன்ற செயல் பாடுகளில் மாணவர்களை ஈடு படுத்தி ஊக்கமளித்து வருகின்றனர் இப்பள்ளி ஆசிரியர்கள்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஊர்ப் புற பறவைகள் கணக்கெடுப்பில் சின்கோனா அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், 4 நாட்களில் 111 வகைகளில் 346 பறவை இனங்களை பார்த்து, கணக்கெடுத்து அதிக விவரங்களைச் சமர்ப்பித்து சர்வ தேசப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர். பறவைகள் கணக் கெடுப்புடன் நின்றுவிடாமல், அவற் றின் வாழ்வியல் பிரச்சினைகள், சூழலியல் தாக்கங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
2 வருடத்தில் ஏற்பட்ட மாற்றம்
பறவைகள் கணக்கெடுப்புக் குழுவை ஒருங்கிணைக்கும் ஆசிரி யர் செல்வகணேஷ் ‘தி இந்து’விடம் கூறியதாவது: வனவிலங்குகள், பறவைகள் பற்றிய அனுபவம் இங்குள்ள மாணவர்களுக்கு நிறையவே உள்ளது. பறவை வந்தால் கல் எடுத்து எறிந்த மாண வர்கள் 2 வருடத்தில் மொத்தமாய் மாறியிருக்கிறார்கள். ஒரு பற வையை பார்த்தால், அது என்ன வகை, எண்ணிக்கை எவ்வளவு, எங்கு, எத்தனை மணிக்கு பார்த் தோம் என குறிப்பு எடுக்கிறார்கள். இந்த பயிற்சியின் அடிப்படையில் பல்வேறு பறவைகள் கணக்கெடுப்பு களில் பங்கேற்று வருகின்றனர்.
நடந்து முடிந்த ஊர்ப்புற பற வைகள் கணக்கெடுப்பில் சிவப்பு மார்பு கானாங்கோழி, மலபார் வெள்ளை - கருப்பு இருவாச்சி உள்ளிட்ட அரிய இனங்களையும், சாம்பல் வாலாட்டி, கரிச்சான் குருவி, நாணல் குருவி உள்ளிட்ட 13 வகை வலசைப் பறவைகளையும் பதிவு செய்தனர். பல நாட்டு போட்டி யாளர்கள் இருந்தும் கூட, குறுகிய நேரத்தில் எங்கள் பள்ளி மாணவர் களே அதிகளவில் பறவைகள் பட்டியலை வெளியிட்டனர். சூழலி யல் அமைப்பான என்சிஎப் எங்க ளுக்கு உறுதுணையாக இருக்கிறது. 70 மாணவ, மாணவிகள் இந்த குழு வில் உள்ளனர் என்றார்.
படிப்புக்கு உதவும் ஆய்வு
பறவைகள் குறித்து சிறு சிறு ஆய்வுகளையும் மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே தொடங்கி யுள்ளனர். 2016 நவம்பரில் திரு நெல்வேலியில் தமிழ் பறவையா ளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் சின்கோனா பள்ளி மாணவர்கள் ஹரிகிருஷ்ணன், மைதீஸ்வரன், சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு ‘சின்கோனா பறவைகள்’ என்ற தலைப்பில் கருத்துரை வழங் கினர்.
மேலும் ‘நெஸ்ட் வாட்ச்’ என்ற பறவைக் கூடுகளை கண்காணித்தல் ஆய்விலும் இப்பள்ளி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் பிரச்சினையை வேகமாகவும், வெளிப்படையாக வும் காட்டும் அளவீடு பறவைகள் மட்டுமே. எனவே பறவைகளைப் பற்றிய தேடலானது பள்ளி மாண வர்களை, சூழலியல் ஆர்வலர் களாக மாற்றும் என்பதில் சந்தேக மில்லை.
வியந்து போனேன்!
பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரி நசுருதீன் கூறும்போது, ‘நான் சமீபத்தில் ஆய்வுக்காக சின்கோனா பள்ளிக்குச் சென்றிருந்தேன். 6-ம் வகுப்பு மாணவன், ஒரு பறவையைப் பார்த்து, அதன் விவரங்களை ஆங்கிலத்தில் தவறில்லாமல் எழுதி, அற்புதமாக எனக்கு விளக்கினான். அதைப் பார்த்து வியந்துபோனேன்.
பறவைகளின் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவற்றை நெருங்கிச் செல்ல வேண்டும். அப்படிப்பட்ட வாய்ப்பை அங்குள்ள ஆசிரியர்களும், பள்ளி வளாகமும் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சொந்தச் செலவில் பைனாகுலர் போன்ற உபகரணங்களை ஆசிரியர்களே வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இது பாராட்டப்பட வேண்டியது. இந்த பயிற்சி ஒரு பொழுதுபோக்காகவும், அதேசமயம் செயல்வழிக் கற்றலாகவும் மாணவர்களை நல்வழிப்படுத்தி வருகிறது’ என்றார்.