Last Updated : 08 Mar, 2014 12:00 AM

 

Published : 08 Mar 2014 12:00 AM
Last Updated : 08 Mar 2014 12:00 AM

மாற்றத்தை தேடிய ஒரு பெண்ணின் பயணம்

பாத்திரம் கழுவும் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண், முதுகலை பட்டம் படித்து இன்று ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வருகிறார்.

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் முத்தமிழ்(26). குடிசைப்பகுதியில் வாழ்ந்து, வாழ்க்கையே போராட்டமாக கொண்டவர் இவர். முத்தமிழின் தந்தை சுவாமிதுரை, தெற்கு ரயில்வேயில் வெல்டராக பணி புரிந்து வந்தார். முத்தமிழின் தாய் பாத்திமா.

தலித் சமூகத்தை சேர்ந்த முத்தமிழ், பள்ளி படிப்பு முடிந்தவுடன், தெற்கு ரயில்வேயில் பாத்திரம் கழுவவும், தோட்டங்களை பார்த்துக் கொள்ளவும் பணியில் அமர்த்தப்பட்டார். மூன்று ஆண்டுகளாக அந்த பணியில் இருந்தவர், பின்பு சென்னை பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்தார். அதன் பிறகு, குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி, மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் மையத்தில் முதுகலை பட்டம் பெற்றார். தற்போது ஆஸ்திரேலியாவில் பழங்குடியின மக்களிடையே பணி புரிந்து வருகிறார்.

எனினும் சொந்த நாட்டின் மீது கொண்டிருந்த பற்றின் காரணமாக சென்னையில் கல்வி மற்றும் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் ‘மாற்றத்தை தேடி’ (Inspiring Change) என்ற அமைப்பை அவரும் அவருடன் படித்த மாணவர்கள் சிலரும் இணைந்து கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்துள்ளனர்.

’மாற்றத்தை தேடி’யின் இயக்குநராக இருக்கும் முத்தமிழ் அதுபற்றி கூறுகையில் “நான் ஒரு தலித்தாகவும், ஒரு பெண்ணாகவும் பல போராட்டங்களை தாண்டி வந்துள்ளேன். அதற்கு கல்விதான் உறுதுணையாக இருந்தது. எனவே மற்றவர்களுக்கு முறையான கல்வி கிடைப்பதற்காகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் நாங்கள் செயல்படுவோம்,” என்கிறார்.

மாதம் நான்கு லட்சம் சம்பளம் கிடைக்கும் வேலையை விட்டு விட்டு சென்னைக்கே வரப்போகும் முத்தமிழுடன் இணைந்து பிரனய் மானே, நபியா எதிராஜ், சரண்யா வைரம், கலைதமிழ் இனியவன், கலைவாணி ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்.

25 குடிசைப்பகுதிகளை தேர்ந்தெடுத்து அங்கு கல்வி மையங்களை அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வுகளை நடத்தி வருகின்றனர் ‘மாற்றத்தை தேடி’ குழுவினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x