

தமிழக சட்டப்பேரவையில் இன்று எடப்பாடி பழனிசாமி கொண்டுவரவுள்ள நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி கடந்த வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். 15 நாட்களுக்கு அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர வலியுறுத்தியிருந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
ஏற்கெனவே, அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக திமுக தெரிவித்துவிட்டது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் தனது நிலைப்பாடை தெரிவிக்காமல் இருந்தது.
இந்நிலையில், இன்று காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தமிழக சட்டப்பேரவையில் இன்று எடப்பாடி பழனிசாமி கொண்டுவரவுள்ள நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. கட்சியினர் அனைவரும்கூடி ஆலோசித்து ஒருமித்து இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.