

வடபழனி பகுதிகளில் ஸ்கூட்டரில் வந்து கொள்ளையடித்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். இவர் பெங்களூருவை சேர்ந்தவர் என்பது விசா ரணையில் தெரியவந்தது.
சென்னை வடபழனி, விருகம் பாக்கம், வளசரவாக்கம் பகுதி களில் பெண் ஒருவர் ஸ்கூட்டரில் வந்து ‘லிப்ட்’ கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்று, நகை, பணத்தை கொள்ளையடிப்பதாக 4-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின. கடந்த 2 நாட்களுக்கு முன்பு விருகம்பாக்கத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(70) என்ற முதியவரிடம், “உங்களை பார்த்தால் எனது தந்தைபோல இருக்கிறது” என்று கூறி, ஸ்கூட் டரில் அழைத்துச் சென்று பணத்தை கொள்ளையடித்திருக் கிறார்.
கோபாலகிருஷ்ணன் கொடுத்த தகவலின்பேரில், அந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், கொள்ளையடிக்கும் பெண்ணும், அவரது கருப்பு நிற ஸ்கூட்டரும் தெளிவாக தெரிந்தது. அதை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், வடபழனியில் ஒரு மகளிர் விடுதியில் அந்த பெண் தங்கியிருப்பது தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு அவரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
போலீஸார் நடத்திய விசா ரணையில், அவர் பெங்களூரு லிங்காபுரம் 15-வது தெருவில் வசிக்கும் ஆஷா என்பதும், கொள்ளையடிப்பதற்காகவே சென்னைக்கு வந்து விடுதியில் தங்கியிருப்பதும் தெரிந்தது. இவர் ஏற்கெனவே 2 முறை கொள்ளை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.