

நீலகிரி மலையடிவாரம், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் அடர்ந்த காட்டின் அருகே அமைந்துள்ளது கல்லார் அரசு பழப் பண்ணை. இங்கு ஆண்டு முழுவதும் ஒரே சீரான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனால், நாட்டில் மிக சில இடங்களில் மட்டுமே விளையக்கூடிய துரியன், மங்குஸ்தான், வெண்ணைப் பழம், ரம்புட்டான் உள்ளிட்ட பல அரிய வகை மருத்துவ குணம்மிக்க பழ வகைகள் விளைகின்றன.
தற்போது, மங்குஸ்தான் பழ சீஸன் தொடங்கியுள்ளது. மரங்களில் ஏராளமான பழங்கள் காய்த்துள்ளன. இவை இன்னும் சில தினங்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். தோல் பகுதி தடிமனாகவும், உடைத்தால் மூன்று அல்லது நான்கு மென்மையான வெள்ளைநிற சுளைகள் கொண்ட தாக உள்ள இப்பழங்கள் உடலுக்கு குளிர்ச்சியையும், உடனடி குளுக்கோஸ் சத்துக்களையும் தரக்கூடி யது என்பதோடு, குடல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது. சுவை மிகுந்த இப்பழம் கிலோ ஒன்றுக்கு ரூ.300 முதல் 400 வரை விலைபோகிறது.
மங்குஸ்தான் காய்த்துள்ள இதே நேரத்தில், போதிய மழையின்மையால் வறட்சி நிலவும் வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் குரங்குகள் இவற்றை உண்ண பழப் பண்ணைக்கு படையெடுக்கின்றன. அவை சாப்பிட்டு சேதப்படுத்துவதால் தினமும் ஏராளமான மங்குஸ்தான் பழங்கள் வீணாகின்றன. இவை பழுத்த பழங்களை உண்ணுவதோடு காய்களையும், பிஞ்சுகளையும் பறித்து எறிவதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இக்குரங்குகளை விரட்ட 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்தும் போதிய பலனில்லை என்கின்றனர் கல்லார் பழப் பண்ணை நிர்வாகத்தினர்.
குரங்குகளுக்கு காயம் ஏற்படாத வகையில் சிறு கற்களை எறிந்தாலும் அவை நகருவதில்லை. எனவே உண்டிவில் மூலமாக விரட்ட முயற்சிக்கின்றனர். எனினும் இவை கிளைக்கு கிளை தாவி தப்புவதோடு, மீண்டும் மீண்டும் மங்குஸ்தான் பழ மரங்களையே சுற்றிச்சுற்றி வருகின்றன. இதனால் செய்வதறியாது தவிப்பதாகவும், வனத்துறையினர் ஏதேனும் நடவடிக்கை எடுத்து பண்ணைக்குள் புகுந்த குரங்குகளை காட்டுக்குள் விரட்ட தங்களோடு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர் இங்குள்ள பணியாளர்கள்.
இதுகுறித்து பழப் பண்ணையை சேர்ந்தவர்கள் கூறும்போது, ‘மங்குஸ்தான் பழம் சீதபேதி, குடல்புண், மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு உடல் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்க வல்லது. இதற்கு வடநாட்டு ஆர்டர்களும், பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், பழக்கடை ஆர்டர்களும் குவிவது வழக்கம். ஆண்டுக்கு பிப்ரவரி- மார்ச், அக்டோபர்- நவம்பர் என 2 சீஸன்களில் காய்க்கக்கூடியது. இந்த பழப்பண்ணையில் 200-க்கும் மேற்பட்ட மங்குஸ்தான் பழ மரங்கள் உள்ளன. இவற்றில் தற்போது 142 மரங்கள் காய்பிடித்து பழுக்கும் தருவாயில் உள்ளன. இவற்றை ஆண்டுதோறும் தனியார் ஏலம் எடுத்து விற்பனை செய்வது வழக்கம். இந்த ஆண்டு தென்காசியை சேர்ந்த ஒருவர் ரூ.11 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள் ளார். ஏலம் எடுத்தவர் இன்னமும் சில நாட்களில் வந்து பழம்பறிப்பு பணிகளை தொடங்குவார். அதுவரை இதை குரங்குகளிடம் இருந்து காப்பாற்றுவதே எங்களுக்கு பெரும்பாடாக இருக்கிறது’ என்றனர்.