மாநில முதல்வர்கள் கூட்டத்தில் ஜெ. பங்கேற்காதது ஏன்? - விஜயகாந்த் கேள்வி

மாநில முதல்வர்கள் கூட்டத்தில் ஜெ. பங்கேற்காதது ஏன்? - விஜயகாந்த் கேள்வி

Published on

தமிழகத்தில் உள்ள பல்வேறு காரணங்களுக்காக முதல்வர், அனைவரின் வேண்டுகோளை ஏற்று டெல்லிக்கு சென்றிருக்க வேண்டும். அதனை தவிர்த்து உதாசீனப்படுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஏற்கெனவே தென்னைமரக் காப்பீட்டுத் திட்டம், கொப்பரைத் தேங்காய் அரசால் நேரடி கொள்முதல், டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் அரசே நேரடியாக கொள்முதல் செய்யும் நிலையங்கள், போன்ற அறிக்கைகள் இன்று வரை வெறும் அறிக்கைகளாகவே உள்ளன.

இந்த திட்டங்கள் இன்று வரை நடைமுறைக்கு வந்ததாக தெரியவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஜெயலலிதாவால் அறிவிக்கப்படும் அனைத்துத் திட்டங்களும் மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகங்களாக உள்ளதே தவிர, இதனால் யாரும் பயன் அடைந்ததாக தெரியவில்லை என்று விவசாயிகளும், மக்களே கூறும் அவலநிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

இது போன்ற எல்லா நிலைகளையும் பிரதமரிடத்தில் எடுத்துரைக்க டெல்லியில் நடந்த அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தில், ஜெயலலிதாவே நேரடியாக கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், விவசாயிகள் எடுத்துரைத்தும், எப்போதும் போல் தான்தோன்றி தனமாக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அனுப்பி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க செய்துள்ளார்.

முதல்வர் நேரடியாக கலந்து கொள்வதற்கும், தன் பங்கிற்காக ஒரு அமைச்சரை அனுப்பி பங்கேற்க வைப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தன் சொந்த பிரச்சினைக்காக பிரதமரை சந்திக்கும் ஜெயலலிதா, மக்கள் பிரச்சினைக்காக செல்வதில்லையே என்று அனைத்து தரப்பு அரசியல் ஆர்வலர்களும், மக்களும் பேசும் நிலையை ஏற்படுத்தி உள்ளார்.

அகிலேஷ் யாதவ், சித்தராமையா இவர்கள் இரண்டு முதல்வர்கள் தவிர, மற்ற மாநில முதலமைச்சர்கள் அனைவருமே இந்த கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு காரணங்களுக்காக முதல்வர் அனைவரின் வேண்டுகோளை ஏற்று டெல்லிக்கு சென்று இருக்க வேண்டும். அதனைத் தவிர்த்து உதாசீனப்படுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

எதிர்க் கட்சிகள் மக்கள் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, ஆளும் கட்சியை கேள்வி கேட்கும் போது பதில் கூறுவதை விட்டுவிட்டு அவர்கள் மீது அவதூறு வழக்குகளை போடுவதை ஜெயலலிதா இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டின் நிலையை உச்சநீதிமன்ற நீதியரசர்கள் தீபக் மிஸ்ரா, நாகப்பன் கடுமையாக கண்டித்து, மூன்று வார காலத்திற்குள் ஜெயலலிதாவே பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வழக்குகளை தொடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களின் பேச்சில் அவதூறு உள்ளதா என்பதை ஆராய வேண்டாமா?, அரசு வக்கீல்களை போஸ்ட்மேன் போல தமிழக அரசு பயன்படுத்துவது முறையா என்று அடுக்கடுக்கான கேள்விகளை நீதியரசர்கள் சரமாரியாக கேட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றமும் தொடர்ந்து தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து உயர் நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு பல வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றியுள்ளது உண்மையிலையே பாராட்டுக்குரியது.

எனவே, தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்கள் பிரச்சினைகளில் தீவிர கவனம் செலுத்தி அதற்கான தீர்வைக் காணவேண்டுமே தவிர, எதிர்க் கட்சிகளை எதிரிக் கட்சிகளாக எண்ணக் கூடாது.

மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் முறையாக பயன்படுத்தாமல் ஏற்கெனவே நிலுவையில் உள்ளது. தமிழக அரசு உண்மையில் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தி அரசு செயல்பட வேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in