

சென்னையில் தக்காளி விலை உயர்வை சமாளிக்க பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.61-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக இன்றும் (வெள்ளிக்கிழமை) கடைகளை திறந்து வைக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நாடு முழு வதும் தக்காளி கிலோ ரூ.80-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக ரூ.80-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. ஜாம்பஜார் மற்றும் பல்வேறு சில்லறை மார்க்கெட்டுகளில் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள், சமையலில் தக்காளி பயன்பாட்டை தவிர்த்தனர். இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று தக்காளியின் விலை ரூ.65 ஆகவும், சில்லறை மார்க்கெடுகளில் ரூ.75 ஆகவும் குறைந்தது.
இது தொடர்பாக மத்திய உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஜூன்- ஆகஸ்ட் மாதங்களில் தக்காளி, உருளைக் கிழங்கு விலை உயர்வது வழக்கமானது. அதற்காக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
தக்காளி விலை உயர்வு தேசிய அளவில் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தலைமையில் நேற்று முன்தினம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அக்கூட்டத்தில், சென்னையில் உள்ள 42 பண்ணை பசுமை கடைகளிலும் வெளிச்சந்தையில் விலையை கட்டுப்படுத்தும் விதமாக மலிவு விலையில் தக்காளியை விற்பனை செய்ய வேண்டும். வழக்கமான கொள்முதலைவிட, இரட்டிப்பாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார்.
42 கடைகளுக்கும்
அதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளுக்கு வழக்கமாக கொள்முதல் செய்யப்படும் 3.5 டன்னுக்கு பதிலாக, 10 டன் தக்காளி நேற்று கொள்முதல் செய்யப்பட்டு 42 கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தக்காளி விலை ரூ.61 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்ணை பசுமை கடைகளுக்கு வழக்கமாக வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படும். தக்காளி விற்பனைக்காக இன்று அனைத்து கடைகளும் வழக்கம்போல் இயங்கும் என்று கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.