

பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் மேலும் 3 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அத்திவெட்டி மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணுச்சாமி(65). இவர், அதே ஊரில் சுமார் 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, நெல் சாகுபடி செய்து வந்தார். காவிரி தண்ணீர் கிடைக்காததாலும், போதிய மழை பெய்யாததாலும் பயிர்கள் கருகின. நேற்று முன்தினம் வயலுக்குச் சென்று, கருகிய பயிர்களைப் பார்த்த அதிர்ச்சியில் வீட்டுக்கு வந்த கண்ணுச்சாமி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(65). இவர், 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி செய்திருந்தார். தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகிய நிலையில் நேற்று காலை வயலுக்குச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பசுவயல் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.குப்பமுத்து(65), பாலையூரில் உள்ள தனது வயலில் சாகுபடி செய்திருந்த நெற்பயிரை நேற்று பார்வையிட்டுள்ளார். அப்போது, தண்ணீரின்றி பயிர்கள் கருகிக் கிடந்ததைப் பார்த்தவுடன் மாரடைப்பு ஏற்பட்டு, நிலைதடுமாறி வயல் வரப்பிலேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார்.