

வானிலை மாற்றத்தால் மின்சாரத் தேவை திடீரென குறைந்ததால், மின்வெட்டு அறிவிக்கப்பட்ட முதல் நாளான திங்கள் கிழமை, சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் வெட்டு அமலாகவில்லை.
மத்திய மின் நிலையங்கள் மற்றும் தூத்துக்குடி மின் நிலையத்தில் ஒரு அலகில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மாவட்டங்களில் எட்டு முதல் 10 மணி நேரம் வரை, மின்வெட்டு அமலானது.
சென்னையிலும் இரண்டு மணி நேர மின்வெட்டு திங்கள் கிழமை முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திங்கள் கிழமை சென்னையில், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டுமே மின் வெட்டு அமலானது. சென்னையின் பல பகுதிகளில் மின்வெட்டு அமலாக வில்லை.
இதுகுறித்து, மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:
திங்கள் கிழமை குளிர்ந்த பருவ நிலை நிலவியதால், மின் விசிறி, குளிர்சாதன பயன்பாடு குறைந்து, மின் தேவை குறைந்தது. அதே நேரம், கடந்த ஞாயிற்றுக் கிழமையைக் காட்டிலும் 1000 மெகாவாட் கூடுதலாக 10,050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தியானது. அதனால், தமிழகம் முழுவதும், குறைந்த அளவே மின் வெட்டு அமலானது.
இவ்வாறு தெரிவித்தனர்.