

பல்வேறு சலுகைகள் அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதி லும் தமிழகத்தில் இருந்து எந்தவொரு தொழில் முதலீட் டாளரும் வேறு மாநிலங்களுக்குச் செல்லவில்லை என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று தொழில், குறு, சிறு, நடுத் தரத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:
திமுக உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா (மன்னார்குடி):
அண்மை காலமாக தமிழகத்துக்கு வரவேண்டிய சில தொழிற்சாலைகள் ஆந் திரம், கர்நாடகம் போன்ற மாநிலங் களுக்குச் செல்கின்றன.
முதல்வர் ஜெயலலிதா:
அப் படிச் சென்ற ஒரு தொழில் நிறுவனத்தின் பெயரையாவது அவர் கூற வேண்டும். உண்மை என்னவென்றால், ஆந்திரம், கர்நாடகம் போன்ற பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் தமிழகத்துக்கு வந்து கூட்டம் நடத்தினர். தொழிலதிபர்களைச் சந்தித்து இலவச நிலம் உள்ளிட்ட பல சலுகைகள் அளிப்பதாக கூவிகூவி அழைத்தனர். ஆனாலும் ஒருவர் கூட செல்லவில்லை.
ஒரு தொழிலைத் தொடங்கி அதனை லாபகரமாக நடத்த வேண்டுமானால் அம்மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நன்றாக இருக்க வேண்டும். தரமான, தடையற்ற மின்சாரம் வேண்டும். இந்த இரண்டும் சிறப்பாக உள்ள மாநிலம் தமிழகம் மட்டுமே. ஆந்திரமும், கர்நாடகமும் தமிழகத்தில் இருந்து மின்சாரத்தை வாங்குகிற நிலையில் உள்ளன. எனவே, தமிழகத்தில் இருந்து இந்த மாநிலங்களுக்கு முதலீட்டாளர்கள் யாரும் செல்ல மாட்டார்கள்.
(இவ்வாறு முதல்வர் ஜெய லலிதா பதிலளித்ததும், டி.ஆர்.பி. ராஜா ஆங்கிலத்தில் பேசினார். அதற்கு ஆங்கிலத்திலேயே முதல்வர் பதிலளித்தார்.)
டி.ஆர்.பி.ராஜா:
நான் சொல்ல வருவதை முதல்வர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன். நான் ஒன்று கேட்க, இரண்டு அமைச்சர்கள் குறைந்தபட்ச ஆதார விலை பற்றி பேசுகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா:
எனது அருமை இளம் உறுப்பினரே... நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்கு முழுமையாகப் புரிகிறது. தமிழகத்துக்கு வரவேண் டிய தொழிற்சாலைகள் ஆந்திரம், கர்நாடகத்துக்கு செல்வதாக நீங்கள் கூறியது தவறானது.
டி.ஆர்.பி.ராஜா:
உங்களது கருத் தில் நான் மாறுபடுகிறேன். தொழிற் சாலைகள் வேறு மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருப்பதாக சந் தேகங்கள் கிளம்பியுள்ளன என்று தான் குறிப்பிட்டேன். இது போன்ற சந்தேகங்கள் தொழில் துறையில் இருப்பதையே நான் சுட்டிக்காட்டினேன். இது உங்களுக்குப் புரியவில்லை என நினைக்கிறேன்.
முதல்வர் ஜெயலலிதா:
எனது அருமை இளைஞரே... நீங்கள் சொல்ல வருவது எனக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறீர்கள். இது என்னிடம் நடக்காது. தமிழகத்தில் இருந்து தொழிற் சாலைகள் ஆந்திரம், கர்நாடகத் துக்கு சென்றதாக நீங்கள் கூறி னீர்கள். அது தவறு என நான் திரும்ப, திரும்ப கூறி வருகிறேன்.
டி.ஆர்.பி.ராஜா:
நீங்கள் புரிந்து கொண்டால் சரிதான்.
முதல்வர் ஜெயலலிதா:
தமிழகத்தில் இருந்து வேறு எங்கும் செல்லாத தொழிற்சாலைகளை, வேறு மாநிலங்களுக்குச் சென்ற தாக சொல்லப்படுகிறது என டி.ஆர்.பி.ராஜா கூறினார். மெட்ரோ ரயில் தமிழகத்தில் ஓடிக் கொண்டிருகிறது. ஆனால், அதற்கான ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஆந்திர மாநிலம் சிட்டிக்கு சென்றது ஏன்? இதற்கு டி.ஆர்.பி.ராஜா பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை எனக் கூறி தப்பித்துக் கொள்ள முடியாது.
டி.ஆர்.பி.ராஜா:
நான் சாதாரண எம்.எல்.ஏ., என்னிடம் முதல்வரின் கேள்விக்குப் பதில் உள்ளது. ஆனால், எனது கேள்விக்கு முதல்வரிடம் பதில் இல்லை. மெட்ரோ ரயில் பெட்டி தொழிற்சாலை என்பது மத்திய அரசின் திட்டமாகும்.
முதல்வர் ஜெயலலிதா:
மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் திட்டமாகும். இதற்கு அதிமுக ஆட்சியில்தான் பிள்ளையார் சுழி போடப்பட்டது. ஆனால், மெட்ரோ ரயில் பெட்டி தொழிற்சாலை மட்டும் ஆந்திரத்துக்கு சென்று விட்டது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம் அல்ல. திமுக ஆட்சியில கையெழுத்தான மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தில் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் மூலம் கிடைக்கும் லாபத்தில் மத்திய அரசுக்கும் பங்கு உண்டு. ஆனால், நஷ்டத்தை தமிழக அரசு மட்டுமே ஏற்க வேண்டும். அதுபோல இந்தத் திட்டத்துக்காக வாங்கிய கடனுக்கு தமிழக அரசு மட்டுமே பொறுப்பு என்பது போன்ற தமிழகத்துக்கு துரோகம் இழைக்கின்ற அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளன. எனவேதான், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.