

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், பாபநாசம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் பல இடங்களில் வாழை மரங்களும், மின்கம்பங் களும் முறிந்து விழுந்தன. பாப நாசத்தில் அதிகபட்சமாக 140 மில்லி மீட்டர் மழை பதிவானது.
கும்பகோணம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று, இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. அப்போது வீசிய சூறைக்காற்றில் பட்டீஸ்வரம், தேனாம்படுகை, திருமேற்றளிகை, திருவலஞ்சுழி, வலையப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
மேலும் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் பகுதிகளில் ஆங்காங்கே பல வேப்பமரங்களும் சாய்ந்தன. தேனாம்படுகை அருகே மிகப்பெரிய வேப்பமரம் சாலையில் முறிந்து விழுந்ததால், கும்பகோணம்- ஆவூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமேற்றளிகை பகுதியில் வீசிய சூறைக்காற்றில் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் நேற்று மாலை வரை அப்பகுதியில் 150 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.
பாபநாசம் அருகே துரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரெ.அய்யாறு (55) என்பவர் நேற்று வயலுக்குச் சென்றபோது, அங்கு சூறைக்காற்றில் அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் இறந்தார்.
கும்பகோணம், பாபநாசம் பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது பூக்கும் மற்றும் பஞ்சுவிடும் தருணத்தில் உள்ள பருத்தி சாகு படிக்கு இம்மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், பம்புசெட் மூலம் நடைபெற்று வரும் குறுவை சாகுபடி பணிகளுக்கு இம்மழை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
கும்பகோணம் பகுதியில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையில், பாபநாசத்தில் அதிகபட்சமாக 140 மில்லி மீட்டர் பதிவானது. மற்ற இடங்களில் பெய்த மழையளவு விவரம்(மில்லி மீட்டரில்): கும்பகோணம் 37, அணைக்கரை 29, திருவிடைமருதூர் 27, அய்யம்பேட்டை 14.
நாகை மாவட்டத்தில் மழை
நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப் பூண்டியில் 50.40 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. மற்ற இடங்களில் பெய்த மழையளவு விவரம்(மில்லி மீட்டரில்):
மயிலாடுதுறை 10.20, நாகப்பட்டினம் 34.60, சீர்காழி 24.40, தரங்கம்பாடி 5, தலைஞாயிறு 14.80, மணல்மேடு 12, கொள்ளிடம் 11.