

அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை, தீயணைப்பு மற்றும் சிறைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் 126 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக உள்துறை செயலர் அபூர்வ வர்மான வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழகத்தில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல்படை மற்றும் தமிழக விரல்ரேகைப்பிரிவு அலுவலர்களின் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதை பாராட்டும் வகையிலும், ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணாவின் பிறந்த நாளன்று முதல்வர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு, காவல்துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல், முதலாம் நிலை காவலர் வரை 100 அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் நிலைய அலுவலர் முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 7 அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், சிறைத்துறையில் துணை சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக்காவலர் வரையிலான 9 பேருக்கும், ஊர்க்காவல் படையில் 8 பேருக்கும் மற்றம் விரல் ரேகைத்துறையில் பணியாற்றிய 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள் என 126 பேருக்கு 'தமிழக முதல்வரின் அண்ணா பதக்கங்கள்' வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பதக்கங்கள் பெறுவோருக்கு அவர் பதவிக்கேற்ற வகையில், பதக்க விதிகள் படி ஒட்டு மொத்த மானியத்தொகையும் வெண்கலப்பதக்கமும் அளிக்கப்படும். முதல்வர் பங்கேற்கும் சிறப்பு விழாவில் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, இப்பதக்கங்கள் அளிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.