

நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் சங்கர் குடும்பத்துக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ''சத்தீஸ்கர் மாநிலத்தில் பெஜ்ஜி காவல்நிலையத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் சாலை கட்டுமானப்பணிகளுக்கானப் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்கள் (சி.ஆர்.பி.எஃப்) ஈடுபட்டிருந்தபோது, நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 12 வீரர்கள் கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பு தெரிவிக்கிறது.
அதிர்ச்சி தரும் இந்தத் தாக்குதலில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகிலுள்ள கழுமரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்ற வீரரும் பலியாகியுள்ளார் என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலியான வீரர் சங்கருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தனது குடும்பம் – உற்றார் - உறவினர் எல்லோரையும் விடுத்து, தாய்நாட்டைக் காக்கும் பணியில் அயல் மாநிலத்தில் அல்லும் பகலும் பாதுகாப்பில் ஈடுபட்டு தன் உயிரைத் தியாகம் செய்திருக்கும் வீரர் சங்கருக்கு வீர வணக்கத்தை செலுத்தி, அவரது இழப்பால் வேதனையில் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது தியாக உடலுக்கு திமுகவின் சார்பில், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான க.பொன்முடி அஞ்சலி செலுத்துவார்.
வீரமரணமடைந்த மற்ற வீரர்களுக்கும் இறுதி வணக்கத்தை செலுத்துவதுடன், தமிழக வீரர் சங்கரின் குடும்பத்திற்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
உள்நாட்டுக்குள் நடைபெறும் இத்தகைய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும், வளர்ச்சித் திட்டங்களையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.