பேரவைத் துளிகள்

பேரவைத் துளிகள்
Updated on
1 min read

l மாடுகள் விற்பனை கட்டுப்பாடு விவகாரத்தில் முதல்வரின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்த திமுக உறுப்பினர்கள், பேரவை லாபியில் நின்று கோஷமிட்டனர். அவர்களுக்கு கண்டனம் தெரிவித்த பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘வெளிநடப்பு செய்வதாக கூறியவர்கள் வெளியேற வேண்டும். லாபியில் நின்றுகொண்டு அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்’’ என எச்சரித்தார்.

l கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கண்டித்த பேரவைத் தலைவர், ‘‘உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அப்போது திமுக உறுப்பினர்கள் ஜெ.அன்பழகன், ப.ரங்கநாதன் ஆகியோர் எழுந்து ஏதோ கூற முயன்றனர். அவர்களை அமரும்படி கூறிய பேரவைத் தலைவர், ‘‘நீங்கள் இருவரும் அமைதியாக இருந்தாலே பேரவை அமைதியாக நடக்கும்’’ என சிரித்தபடி கூறினார். அந்த நேரத்தில் மற்றொரு திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி எழுந்து ஏதோ கூற, ‘‘அந்த இருவருடன் உங்களையும் சேர்த்துக்கொள்கிறேன்’’ என பேரவைத் தலைவர் கூறியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in