Published : 05 Jun 2017 07:33 PM
Last Updated : 05 Jun 2017 07:33 PM

லோக் ஆயுக்தா அமைக்ககோரி சிபிஐ(எம்) வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு தொடுத்தது. அதன் படி நிலவர அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

இது தொடர்பாக வெளியான அறிக்கை வருமாறு:

மாநில அரசுத்துறையில் உள்ளவர்கள் மீது ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா சட்டம் 2013ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின் 63-ஆவது பிரிவில் உள்ள மூன்றாவது பகுதியில் அனைத்து மாநிலங்களும் லோக் ஆயுக்தா அமைப்பை சட்டம் இயற்றப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் நிறுவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி லோக் ஆயுக்தா அமைப்பு டிசம்பர் 17, 2014-ஆம் ஆண்டுக்குள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஆனால் லோக் ஆயுக்தா அமைப்பு இதுவரை தமிழகத்தில் நிறுவப்படவில்லை. தமிழ்நாடு கிரானைட் முறைகேட்டை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கையில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கிரானைட் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதில் அரசுத்துறையில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த முறைகேடுகளை களைய தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, லோக் ஆயுக்தா சட்ட 2013 பிரிவு 63-இல் உள்ள மூன்றாவது பகுதியின்படி தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு திங்களன்று (ஜூன். 5) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் மணி சங்கர்,"லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய 4 வாரம் காலம் அவகாசம் வேண்டும்." என்றார். இதனைத் தொடர்ந்து 4 வாரத்தில் நிலை லோக் ஆயுக்தா அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நிலை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் இடைக்கால உத்தரவு பிறபித்த நீதிபதிகள், வழக்கு விசாரணை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆஜராகி வாதாடினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x