

தூத்துக்குடி மாவட்டத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய, பாபநாசம் அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்தார்.
நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதியில் இரண்டரை அடி தண்ணீர் இருந்தால் தான் திருச்செந்தூர், ஆத்தூர், ஆறுமுகநேரி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியும். ஆனால், அணையில் தண்ணீர் குறைவாக இருந்ததால் இப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோ கம் செய்ய முடியவில்லை. மேலும் ஸ்ரீவைகுண்டம், சாய்புரம், ஏரல், நாசரேத் உள்ளிட்ட 6 குடிநீர் திட்டங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து, பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 250 கன அடியிலிருந்து 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதிக்கு இந்த தண்ணீர் வந்ததையடுத்து திருச்செந்தூர், ஆத்தூர், ஆறுமுகநேரி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்க முடியும்.
அனல்மின் நிலையம்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு மட்டும் 20 எம்ஜிடி திட்டத்தின் கீழ் தண்ணீர் கொண்டு செல்ல முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அனல்மின் நிலையத்துக்கு தண்ணீர் வழங்குவது தொடர்பாக அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பாட்டிலுள்ள 23 குடிநீர் திட்டங்களுக்கு மொத்தம் 75 எம்எல்டி குடிநீர் தேவை. தற்போது சராசரியாக 70 சதவீதம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலையில் 50 எம்எல்டி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ரூபெல்லா தடுப்பூசி
தூத்துக்குடி மாவட்டத்தில் 3,82,376 குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டிய நிலையில் இதுவரை 1,51,076 பேருக்கு போடப்பட்டுள்ளது. இது 40 சதவீதம் ஆகும். தடுப்பூசி போடுவதற்கான அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மீனவர்களுக்கு உதவி
மீன்பிடிக்கச் சென்று ஐக்கிய அரபு நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட 3 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம், விபத்தில் இறந்த மீனவரின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம், கடலில் காணாமல் போன 2 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை ஆட்சியர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராசையா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ரூ.75.67 கோடி திட்டப்பணிகள் 8-ம் தேதி முதல்வர் திறக்கிறார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம், தூத்துக்குடி விளையாட்டு விடுதி கட்டிடம், நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி கட்டிடம் உட்பட நிறைவடைந்த ரூ. 75.67 கோடி மதிப்பிலான 29 பணிகளை தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி வரும் 8-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
திருநெல்வேலியில் வரும் 8-ம் தேதி நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்வர் கே.பழனிச்சாமி, வீடியோ கான்பரன்சிங் மூலம் இவற்றை திறந்து வைக்கிறார் என்றும் ஆட்சியர் கூறினார்.