

விளை நிலங்களை அங்கீகார மில்லாத வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்தால் அந்த மனைகளையோ, அவற்றில் உள்ள கட்டிடங்களையோ பதிவு செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் காரணமாக, பத்திரப்பதிவுத் துறை முடங்கியுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் உத்தர வைத் தொடர்ந்து சென்னையில் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மற்றும் சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் நகர ஊரமைப்பு இயக்குநரகத்தின் (டிடிசிபி) ஒப்புதல் பெறாமல் மனை யிடங்களைப் பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத் துறை தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பத்திரவுப்பதிவு கடுமையாக முடங்கியுள்ளது.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டி சிஎம்டிஏ அல்லது டிடிபிசி அங்கீகாரம் பெற்ற மனைகளுக்கு மட்டுமே பத்திரப்பதிவு செய்யப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 5 நாட்களாக பத்திரம் பதிய வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்கள் வெறிச்சோடியுள்ளன.
இது தொடர்பாக பத்திரப்பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் வீட்டுமனை விற்பனை தொடர்பாக எந்த பத்திரப்பதிவும் நடைபெறாமல் முடங்கியுள்ளது. இதனால் பத்திரப்பதிவு வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வழிகாட்டி மதிப்பை உயர்த்தியதால் பத்திரப்பதிவு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 2012-ல் 35 லட்சத்து 18 ஆயிரத்து 435 பத்திரங்கள் பதியப்பட்டு அதன் மூலம் அரசுக்கு ரூ. 6 ஆயிரத்து 619 கோடி வருவாய் கிடைத்தது. ஆனால் கடந்த 2015-16-ல் மொத்தம் 25 லட்சத்து 28 ஆயிரத்து 561 பத்திரங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. ஆனால் அரசுக்கு ரூ.8 ஆயிரத்து 562 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளை ஒப்பிடுகையில் சுமார் 10 லட்சம் பத்திரப்பதிவு குறைந்துள்ளது. சிஎம்டிஏ, டிடிபிசி அங்கீகாரத்தை எளிதாக்குவது குறித்து அரசு ஏதாவது முடிவு எடுத்தால் மட்டுமே இதில் விமோசனம் கிடைக்கும்” என்றார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர் சங்கத் தலைவர் ஆர்.சி. பால்கனகராஜ் கூறும்போது, “ரியல் எஸ்டேட் தொழிலை ஒழுங்கு படுத்தி, வீட்டு மனையிடங்களை முறைப்படுத்துவதற்காகத்தான் இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்றம் இதில் தலையிடாமல் இருந்தால் தமிழகத்தில் விளை நிலங்களே இல்லாத சூழல் உருவாகி விடும். அதேநேரம், தரிசு நிலங்களை முறையாக சட்டத்துக்குட்பட்டு, வீட்டு மனைகளாக மாற்றி சிஎம்டிஏ அல்லது டிடிசிபி ஒப்புதலோடு விற்பனை செய்தால் எந்த பிரச் சினையும் ஏற்படாது. அர சுக்கும் வருவாய் அதிகரிக்கும்” என்றார்.
சென்னை அக்க்ஷயா ஹோம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டி.சிட்டிபாபு கூறும்போது, “விளைநிலங்களை மனையிடங்களாக மாற்றுவதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாள வேண்டும். அதை யாரும் சரியாக செய்வதில்லை. ஓர் ஏக்கர் என்பது 18.15 கிரவுண்ட் நிலம். அதை முறையாக அங்கீகாரம் பெற்று விற்றால் 11 கிரவுண்ட் நிலத்தை மட்டும்தான் விற்பனை செய்ய முடியும். ஆனால் குறுக்கு வழியில் விற்பனை செய்பவர்கள் ஓர் ஏக்கரில் 16 கிரவுண்ட் நிலத்தை விற்கின்றனர். ஒரு லே-அவுட் போடும்போது அதில் 10 சதவீத நிலத்தை திறந்த வெளியிடமாகவும், 30 சதவீத நிலத்தை சாலை வசதிக்கும், 5 சதவீத நிலத்தை வணிக கட்டிடங்கள் கட்டுவதற்கும் ஒதுக்க வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை. இதனால் வீடுகளை விளை நிலங்களில் கட்டிக்கொண்டு பின்பு அவதியடைகின்றனர். பெரு வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கும் இதுபோன்ற விதிமீறல்கள்தான் மூல காரணம். இந்த உத்தரவு வரவேற்கப்பட வேண்டியது” என்றார்.
கிரெடாய் அமைப்பின் சென்னை மண்டல உறுப்பினரான ரூபி பில்டர்ஸ் ஆர்.மனோகரன் கூறும்போது, “உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஒருவிதத்தில் ஆரோக்கியமான விஷயம். ஆனால் டிடிபிசி ஒப்புதல் பெறுவதற்கு பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதுவே லஞ்சத்துக்கு வழி வகுத்துவிடக் கூடாது. பொதுமக்களுக்கும் பாதகம் இல்லாமல்அதேநேரம் பத்திரப்பதிவுத்துறைக்கும் வரு வாயைப்பெருக்கும் விதத்தில் அரசு இந்த விஷயத்தில் நல்ல முடிவை எடுக்க வேண்டும். குறிப்பாக வழிகாட்டி மதிப்பைக் குறைக்க வேண்டும்’’ என்றார்.