

மதுரையில் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் பிடிவாரண்ட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 3 பேர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இதற்கு சிபிஐ பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரையில் ஒரு நாளிதழ் அலு வலகத்தில் கடந்த 9.5.2007-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தில் ஊழியர்கள் வினோத், கோபி நாத், பாதுகாவலர் முத்துராமலிங் கம் ஆகியோர் கொலை செய் யப்பட்டனர். இந்த வழக்கில் கைதான அட்டாக் பாண்டி உட்பட 17 பேரை மதுரை சிபிஐ நீதிமன்றம் 2009-ம் ஆண்டில் விடுதலை செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தியதால் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 12 பேருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப் பிக்கப்பட்டது. இவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட வர்களில் தயாமுத்து, திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன் ஆகியோர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
பிடிவாரண்ட்டில் கைது செய்யப் பட்ட சரவணமுத்து, முருகன் என்ற சொரிமுருகன், சுதாகர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சிறையில் உள்ள ரமேஷ்பாண்டிக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சிபிஐ தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராமையாபாண்டின், வழிவிட்டான், கந்தசாமி ஆகியோரை ஜாமீனில் விடுதலை செய்யக் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ரமேஷ்பாண்டிக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் கேட்டு மேலும் 3 பேர் தாக்கல் செய்திருக்கும் மனுவுக்கும் சேர்த்து சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை செப். 8-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.