அரசியல் லாபத்துக்காக ஈழத் தமிழர்கள் குறித்து தவறான தகவல் பரப்பும் தமிழக தலைவர்கள்: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு

அரசியல் லாபத்துக்காக ஈழத் தமிழர்கள் குறித்து தவறான தகவல் பரப்பும் தமிழக தலைவர்கள்: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

இலங்கை கல்வி அமைச்சர் வி.ராதாகிருஷ் ணன் சென்னையில் நேற்று கூறியதாவது:

இலங்கையில் வரும் 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 8 இடங்களில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் இருந்து 30 பேர் கொண்ட குழுவினர் வரும் 15-ம் தேதி இலங்கை வருகின்றனர். இவர்களின் வருகை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உறவு பாலத்தை அமைக்கும். இலங்கையில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதால்தான் திருவள்ளுவர் சிலையை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் திருவள்ளுவர் சிலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் என்ன பிரச்சினை நடந்தாலும் அது தமிழகத்தில்தான் பிரதிபலிக்கிறது. இலங்கை குறித்து தமிழகத்தில் பல்வேறுவிதமான விமர்சனங் கள் இருக்கிறது. அவற்றில் உண்மை இல்லை. இலங்கை இப்போது அமைதியாக இருக்கிறது. சிங்களர், தமிழர், முஸ்லிம் மக்கள் உறவு பேணப்படுகிறது. இலங்கைக்கு வரவுள்ள தமிழக குழுவினர், அங்குள்ள மக்களை நேரில் பார்த்து உண்மையை அறிந்து, அதுபற்றி தமிழகத்தில் எடுத்துச் சொல்ல இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கும்.

இலங்கையில் தமிழர்கள் நன்றாக உள்ளனர். அவர்களின் நிலங்கள், வீடுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் அமைதியான சூழலை மறைத்து, தமிழகத்தில் உள்ள தலைவர்கள் தங்களது அரசியல் லாபத்துக்காக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

தமிழக அகதி முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்கள் விருப்பப்பட்டால் இலங்கைக்கு வந்து குடியேறலாம். அவர்களுக்குத் தேவையான நிலங்களை இலங்கை அரசு கொடுக்கிறது. இலங்கையில் தமிழ் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. தமிழக அகதி முகாம்களில் இருக்கும் பிஎஸ்சி, பிஎட் படித்தவர்கள் ஆசிரியராக பணியாற்ற இலங்கைக்கு வரலாம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in