Published : 23 Mar 2014 04:32 PM
Last Updated : 23 Mar 2014 04:32 PM

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

தடை செய்யப்பட்ட வலைகளை விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்துவதை தடுக்கக் கோரி, போராடி வரும் ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்களுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழகர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.



பாரம்பரிய மீன்பிடி முறைகளை மட்டுமே பின்பற்றி வந்த தமிழக மீனவர்களுக்கு 1964ல், இந்தியா - நார்வே மீன்பிடி திட்டத்தின் கீழ், நவீன மீன்பிடி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழக விசைப்படகு மீனவர்கள் இரட்டை மடி, சுருக்கு மடி உள்ளிட்ட வலைகளையும், இழுவைப் படகுகள், டைனமைட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தியதால் மீன் வளமும், மீன் குஞ்சுகள் வளர்வதற்கான இயற்கை வளமும் கடலுக்கடியில் இருக்கும் சூழல் மண்டலம் பாதிக்கப்பட்டது.

இதனால், கடல் வளம் அழிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் மீனவர்கள் இரட்டைமடி, சுருக்குமடி, இழுவைப் படகுகள் முதலியவற்றைப் பயன்படுத்த மத்திய-மாநில அரசு தடை விதித்தது. ஆனாலும் விசைப்படகு மீனவர்கள் பலர் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பின்பற்றி வருவதாக தொடர்ந்து பாரம்பரிய மற்றும் நாட்டுப் படகு மீனவர்களும் இலங்கை மீனவர்களும் புகார் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து, ராமேஸ்வரம் தீவு நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த ஒரு மாத காலமாக வேலை நிறுத்தப் போராட்டம், மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம், பாம்பனில் கடலில் இறங்கிப் போராட்டம், நம்புதாளை கடற்கரையில் ஆர்பாட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் மனு அளிக்கும் போராட்டம் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

தற்போது தடை செய்யப்பட்ட வலைகளை விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்துவதை தடுக்கக்கோரி போராடி வரும் ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்களுக்கு ஆதரவாக, இலங்கை தமிழகர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து கிளிநொச்சியிலிருந்து 'தி இந்து' செய்தியாளரிடம் பேசிய போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் கூறும்போது, "இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களின் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் படகுகளால் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாட்டிற்கும் உண்டு.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இரட்டை ராட்சத மடிவலை, சுருக்கு வலை, இழுவலை ஆகியவற்றுக்கு எதிராக எங்கள் தாயக தமிழ் உறவுகள் கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணமாக எதிர்வரும் 31.03.2014 அன்று யாழ்பாணத்தில் இருக்கும் இந்திய தூதரகம் முன்பாக சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் நடத்த உள்ளது" என்றார்.

முன்னதாக பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பறிமுதல் செய்யக்கோரி மீண்டும் காலவரையற்ற போராட்டத்தை இன்று மீண்டும் துவங்கினர். இதனால் நாட்டுப்படகுகள் ஆழமில்லாதப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ராமேஸ்வரம் தீவு நாட்டுப்படகு மீனவர்கள் மார்ச் 28ம் தேதி சென்னையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் பெருந்திரள் மனு அளிப்பு போராட்டத்தை நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x