

அதிமுக செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா இதில் பங்கேற்கிறார்.
தமிழகத்தில் 32 ஆண்டுகளுக்குப் பின் தொடர்ச்சியாக தமிழகத்தில் அதிமுக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், அதிமுகவில் நிர்வாகிகள் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டனர். 16 மாவட்டங்களின் செயலாளர்கள் மாற்றப்பட்டனர். பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் உள்ளிட்ட 14 பேர் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். மனுக்கள் குழு, ஒழுங்கு நடவடிக்கை குழு ஆகியவை கலைக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கட்சியின் அமைப்பு செயலாளராகவும், செய்தித்தொடர்பாளர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார். இது தவிர, அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கும் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுகவின் செயற்குழு சனிக்கிழமை கூடுகிறது. கட்சித் தலைமை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கும் செயற்குழுவுக்கு அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையேற்கிறார். இக்கூட்டத்தில், முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவும் பங்கேற்கிறார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிமுகவில், செயற்குழு உறுப்பினர்களாக உள்ள 150க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.