

மின்வெட்டு பிரச்சினையால் இருண்ட தமிழகத்துக்கு விடுதலை எப்போது என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேமுதிக தலைவர் விஜயாந்த் கேள்வி எழுப்பினார்.
நாமக்கல் தொகுதியில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட விஜயகாந்த் பேசியது:
"நாமக்கல்லைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களுக்கு முந்தைய திமுக அரசும், தற்போதைய அதிமுக அரசும் நாமம் இட்டுள்ளனர்.
தமிழகத்தில் விலைவாசி கடுமையாக அதிகரித்துவிட்டது. அதைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய அமைச்சரவையில் இருந்த திமுக அமைச்சர்களும் தமிழக மக்களுக்காக எதையும் செய்யவில்லை.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்ளும்போது, சாலைகளில் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
மக்களை ஏமாற்றும் திமுக, அதிமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் நல்லாட்சி புரிந்திருந்தால், நான் அரசியலுக்கே வந்திருக்க மாட்டேன். மக்கள் விரோத கூட்டணி பற்றி ஜெயலலிதா பேசுகிறார். அவர்தானே உண்மையில் மக்கள் விரோத சக்தி.
இந்தியாவுக்கு விடுதலை பெற்றுதரும் தேர்தல் என்று ஜெயலலிதா சொல்கிறார். மின்வெட்டால் இருண்டு காணப்படும் தமிழ்நாட்டுக்கு எப்போது விடுதலை? என்று அவர்தான் சொல்ல வேண்டும்.
ஆனால், மின் பிரச்சினையை நான் டெல்லி வரை கொண்டுபோய் பிரதமரிடம் சொன்னேன். இதுவரை மக்கள் பிரச்சினைக்காக ஜெயலலிதா இப்படிச் செய்ததே இல்லை. செய்யவும் மாட்டார்.
அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்தான் நடந்துகொண்டிருக்கிறது. அதிமுகவுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது. இது குறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராவதற்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார் விஜயகாந்த்.
முன்னதாக, விஜயகாந்த் அறிவித்த நாமக்கல் தொகுதி தேமுதிக வேட்பாளர் என்.மகேஸ்வரன் உடல்நலக் குறைவு காரணமாக மக்களவை தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.