

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்க்க தலா ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், மசூதி, தர்காக்களை சீரமைக்க வக்ஃபு வாரியத்துக்கு ரூ.3 கோடி தொகுப்பு நிதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிறுபான்மையினர் நலன்களை பாதுகாக்கவும், அவர்களின் கல்வி, பொருளாதார நிலையை உயர்த்தவும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரை 2,340 கிறிஸ்தவர்கள் புனிதப் பயணம் மேற்கொண் டுள்ளனர்.
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்துக்கான நிர்வாக மானியம் ரூ.45 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி என உயர்த்தி வழங்கப்படுகிறது. ஹஜ் குழுவுக்கான நிர்வாக மானியம் ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தபடி, உலமாக்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது சிறுபான்மையினர் நலனுக்காக புதிய திட்டங்கள் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். தேர்தல் அறிக்கையில், ‘கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தலுக்கு அரசின் மானிய உதவி வழங்கப்படும்’ என வாக்குறுதி அளித்தோம். அதை செயல்படுத்தும் விதமாக, புனரமைப்பு பணிகளுக்கு ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்காக இந்த ஆண்டு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படும்.
பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்றவற்றில் பழுது பார்த்தல், சீரமைப்புக்காக வக்ஃபு வாரியத்துக்கு ரூ.60 லட்சம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில், மசூதிகளை பழுதுபார்க்க, வக்ஃபு வாரியத்தில் தனி நிதியம் ஏற்படுத்த நிதி வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். இதை செயல்படுத்த, வக்ஃபு நிறுவனங்களில் பழுதுபார்ப்பு, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தொகுப்பு நிதி உருவாக்கப்படும். இதற்கு ரூ.3 கோடி வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.