

தமிழ்நாட்டுக்கு ப.சிதம்பரம் எதையுமே செய்யவில்லை என மதுரையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
மதுரை மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
மின் விநியோகத்தை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். எனவே மின்சாரத்தைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். விரைவிலேயே மின்வெட்டே இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும். தி.மு.க. தலைவர் கருணாநிதியும், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டுள்ளனர். தூத்துக்குடியில் நான் பேசியபோது, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு வாக்குறுதி ஏற்கனவே செயல்முறையில் இருப்பதை சுட்டிக் காட்டினேன்.
மக்களை ஏமாற்ற வேண்டும் என கருணாநிதி நினைக்காவிட்டால் தவறு நடந்து விட்டதாகக் கூறியிருக்கலாம். ஆனால், ஏமாற்று வேலையை மறைக்கப் பல பொய்களை அறிக்கை மூலம் அவிழ்த்து விட்டுள்ளார் மத்திய அரசில் அங்கம் வகித்தால் பரிந்துரைதான் செய்ய முடியுமே தவிர, ஆணை போடும் போக்கில் நடக்க முடியாது என தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைமுகமாகக் கூறி உள்ளார். இதையே மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கூறியுள்ளார்.
தமிழர் நலன் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளிலும் பரிந்துரை செய்துவிட்டு வாய்மூடி மவுனியாகி விடுவார் கருணாநிதி. அதன் மூலம் அமைச்சர் பதவிகளை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது தான் தி.மு.க.வின் எண்ணம்.
இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைந்து போனதற்கு ப.சிதம்பரம்தான் காரணம் எனக் கூறியிருந்தேன். சிவகங்கை தொகுதிக்கு எதுவும் செய்ய வில்லை எனவும் தெரிவித் திருந்தேன். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிதம்பரம், நான் உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதாகவும், எழுதி வைத்துப் பேசுவதாகவும் கூறியுள்ளார்.
இவரது பேச்சுதான் செய்த பிழையை மறைப்பது போல் உள்ளது. மத்திய நிதியமைச்சராக இருந்து கொண்டு தமிழ்நாட்டிற்கும், சிவகங்கை தொகுதிக்கும் சிதம்பரம் எதையும் செய்யவில்லை என்பது ஊரறிந்த உண்மை. சிதம்பரம் உண்மையிலேயே தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்திருந்தால் அதை அவர் பட்டியலிட வேண்டும்.
கல்வித் திட்டங்களின் கீழ் தமிழகத்துக்கு வர வேண்டிய ரூ.901.76 கோடியை இன்னும் தராதது உண்மையா, இல்லையா?. திருத்திய மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீட்டை குறைத்தது உண்மையா, இல்லையா?. சாலை மேம்பாட்டுக்காக ரூ.931 கோடி தரப்படாதது உண்மையா இல்லையா?. இந்த கேள்வி களுக்கான பதிலை சிதம்பரம் தெரியப்படுத்த வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பிலேயே அலட்சியமாகச் செயல்படும் மத்திய காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
மதுரையில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் ஜெயலலிதா. படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
வான்வழிப் பயணம் ஏன்?
முதல்வர் மேலும் பேசுகையில், ‘வான் வழியாகச் செல்பவர்களுக்கு மண்ணில் நடப்பது தெரிய வாய்ப்பில்லை என எண்ணை விமர்சனம் செய்திருக்கிறார் சிதம்பரம். அவருக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். 1982 முதல் நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். கடந்த 32 ஆண்டுகளாக தமிழகத்தில் எனது கால்படாத இடமே இல்லை என்னும் அளவுக்குப் பட்டி, தொட்டியெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். மாதக்கணக்கில் பிரச்சாரம் செய்திருக்கிறேன்.
சிதம்பரத்துக்கு வாக்குகேட்டு அவருக்காகக் கூடப் பிரச்சாரம் செய்திருக்கிறேன். நான் பிரச்சாரம் செய்யும்போது சிதம்பரம் திறந்த ஜீப்பில் பின்னால் வந்தார். தற்போது குறைந்த காலத்தில் அனைத்து தொகுதிக்கும் செல்ல வேண்டும் என்ற அடிப்படையிலும், சாலை வழியாகச் சென்றால் காவலர் பணிச்சுமை கூடும் என்பதைக் கருத்தில் கொண்டும்தான் வான்வழியாகச் சென்று கொண்டிருக்கிறேன்.
எனக்குள்ள அச்சுறுத்தல் குறித்து சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது 27.3.2009 அன்று கடிதம் எழுதியிருந்தார். அதில் என்ன குறிப்பிட்டார் என்பதையும் அதற்கு நான் என்ன பதில் எழுதினேன் என்பதையும் சிதம்பரம் படித்துப் பார்க்க வேண்டும். விரக்தியில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.