

பிராணிகள் வதை தடுப்பு சங்கம் செயல்பாடின்றி முடங்கியுள்ளதால், பிராணிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் பிராணிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. மத்திய அரசின் சுற்றுப்புறத் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் உள்ள பிராணிகள் நல அமைப்பின் வழிகாட்டுதலின்படி இந்த சங்கங்கள் அமைக்கப்பட்டன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு செயல்பட்ட இந்த அமைப்பின் துணைத்தலைவர்களாக மாநகர காவல்துறை ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் துறை அலுவலர் ஆகியோரும், செயலாளராக மாவட்ட கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநரும் செயல்பட்டனர்.
நிர்வாக செயலாளராக கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநரும், நிர்வாக துணைச் செயலாளராக கால்நடை உதவி மருத்துவரும், செயற்குழு உறுப்பினர்களாக மாநகராட்சி ஆணையர், கோட்ட வருவாய் அலுவலர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வனத்துறை அதிகாரி, துணை இயக்குநர்(பொது சுகாதாரம்), சுகாதார அலுவலர் (மதுரை மாநகராட்சி) மற்றும் பிராணிகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால், இந்த பிராணிகள் வதை தடுப்பு சங்கம் தற்போது எந்த மாவட்டத்திலும் செயல்படவில்லை எனவும், அதனால், பிராணிகள் வதை தொடர்பாக புகார் தெரிவித்தால் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து மதுரையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.சிவக்குமார் கூறியதாவது:
2011-ல் மதுரை ஆட்சியராக காமராஜ் இருந்தபோது பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தை தொடங்கி தீர்மானம் நிறைவேற்றினார். அவர் மாறுதலாகி சென்றதால், சங்கம் அமைக்கும் பணி நின்றுபோனது.
தற்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், இந்த சங்கத்தைத் தொடங்குவது தொடர்பாக கடந்த ஜனவரி 1-ம் தேதி கூட்டம் நடத்தினார். அதன்பிறகு தற்போது வரை இந்த அமைப்பை தொடங்குவதற்கும், அதற்கான செயல்பாடுகள், பொறுப்பாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
வாகனங்களில் ஆடு, மாடுகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்வது, பொது இடங்களில் ஆடுகளை அறுப்பது மத்திய குற்றவியல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
வாகனங்களில் ஆடு, மாடுகளை ஏற்றிச் சென்றால் அவற்றுக்கான முதலுதவி மருத்துவ வசதி, தண்ணீர், தீவனம் இருக்க வேண்டும். ஆனால், இவை பின்பற்றப்படவில்லை. இவற்றை கண்காணித்து தடுப்பதற்கு பிராணிகள் வதை தடுப்பு சங்கம் அமைக்க வேண்டியது மிகவும் அவசியம். போலீஸில் புகார் கொடுத்தால், பிராணிகள்தானே என்று அவர்கள் அலட்சியப்படுத்துகின்றனர். பிராணிகளுக்கு எதிரான குற்றங்கள், அதற்கான தண்டனைகள் உள்ளிட்டவை குறித்து போலீஸாருக்கும், அதிகாரிகளுக்கும் சரியான விழிப்புணர்வு இல்லை. பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தை ஏற்படுத்த நெறிமுறை சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.