

நெடுந்தீவு அருகே இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி ராமேசுவரம் மீனவர்கள் 5 பேரை அந்நாட்டு கடற்படையினர் சிறைபிடித்ததற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் ராமேசுவரம் பகுதியில் இருந்து நேற்றைய முன்தினம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நேற்றைய தினம் அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை பயமுறுத்தி, உடனடியாக சென்றுவிடுமாறு துரத்தினர். இதனை கண்டதும் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டு கரைக்கு திரும்பினர்.
இச்சூழலில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் வீசிய வலைகளை எடுப்பதற்குள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி, மீன்பிடிச் சாதனங்களை சேதப்படுத்தினர். மேலும் ஒரு படகில் இருந்த 5 மீனவர்களையும் துப்பாக்கியால் மிரட்டி சிறைப்பிடித்துச் சென்றனர். அப்படகையும் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையின் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
இனியும் மத்திய அரசு தமிழக மீனவர்கள் பிரச்சனையில் அலட்சியப் போக்கை கைவிட்டு, மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையால் பெரிதும் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மேலும், மத்திய அரசு இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு இலங்கையின் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்ற தமிழகத்தைச் சேர்ந்த 34 மீனவர்களை விடுவிக்கவும், தமிழக மீனவர்களின் 95 படகுகளை ஒப்படைக்குமாறும் வலியுறுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து மத்திய அரசு இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தையை விரைவில் நடத்துவதற்கு உண்டான சுமூக சூழலை ஏற்படுத்தி கொடுக்க இலங்கையை வற்புறுத்த வேண்டும்.
அதே போல கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை பெற்றுத்தர பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும். இரு நாட்டு மீனவர்களுக்கும் ஒரு நிரந்தரமான நல்ல தீர்வு ஏற்படுத்தி தர, ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்பட மத்திய பாஜக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் அவசர நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.