

கோ. சுகுமாரன் - செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.
மத்திய அரசின் அதிமுக்கியப் பதவியில் இருக்கிறார் நாராயணசாமி. ஆனால், புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருக்கும் சுமார் ஒன்றரை லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை. இங்கு மத்திய அரசின் சார்பில் பெரிய தொழிற்சாலைகள் எதுவும் கொண்டுவரப்படவில்லை. சிறப்புப் பொருளாதார மண்டலம் திட்டமும் நிலம் கையகப்படுத்தியதுடன் கிடப்பில் உள்ளது. முதல்வருக்கும் நாராயணசாமிக்குமான பனிப்போரால் புதுச்சேரியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
அன்பழகன் - மாநிலச் செயலாளர், அ.தி.மு.க.
புதுச்சேரி மக்கள் சோதனை எலிகளா என்கிற சந்தேகம் வருகிறது. ஆதார் அட்டை, கேஸ் சிலிண்டர் நேரடி மானியம் உட்பட, பல மக்கள் விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு இங்குதான் முதன்முதலில் நடைமுறைப்படுத்தி மக்களைச் சோதிக்கிறது. நாராயணசாமி மாநில வளர்ச்சிக்காகச் செயல்படவில்லை. வெறுமனே டெல்லிக்கும் சென்னைக்கும் விமானத்தில் அதிக முறை பயணித்தது மட்டுமே அவரது சாதனை. தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த எதையும் அவர் செய்யவில்லை.