வடபழனி தீ விபத்து: ஆறுதல் கூறாமல் சென்ற அமைச்சர்; ஆதங்கப்பட்ட உறவினர்கள்

வடபழனி தீ விபத்து: ஆறுதல் கூறாமல் சென்ற அமைச்சர்; ஆதங்கப்பட்ட உறவினர்கள்
Updated on
1 min read

சென்னை வடபழனி அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் காயமடைந்தவர்களைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் யாரையும் சந்தித்து ஆறுதல் கூறவில்லை என பலியானவர்களின் உறவினர்கள் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர்.

வடபழனி தெற்கு பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திங்கள்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. மேலும், படுகாயமடைந்த 8 பேருக்கு தீக்காயங்கள் சிகிச்சைபிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தகவல் அறிந்த அவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் மருத்துவமனை முன்பு திரண்டனர்.

இந்நிலையில், தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிய அமைச்சர் ஜெயக்குமார், தனது மகனும் எம்பி-யுமான ஜெ.ஜெயவர்தனுடன் நேற்று காலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். ஆனால், அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவில்லை.

இதுகுறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சிலர் கூறும்போது, “மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் யாரையும் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. மருத்துவமனைக்கு வந்தவர், வந்த வேகத்தில் கண்துடைப்புக்காக காயமடைந்த ஒருவரை மட்டும் பார்த்துவிட்டு, பேட்டியளித்துவிட்டு சென்றுவிட்டார். அவர் எதற்காக இங்கு வர வேண்டும்” என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in