

மாம்பாக்கம் கிராமத்தில் புதுச்சேரி மதுபாட்டில் விற்பனை நடைபெறுவதை கண்டித்து, அப்பகுதி பெண்கள் 2-வது நாளாக மதுராந்தகம் - சூணாம்பேடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் புதுச்சேரி மதுபாட்டில்களின் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருவதாக கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த திருட்டு மது விற்பனையால் அப்பகுதியில் உள்ள சிறுவர்களும் மது அருந்தும் பழக்கத்துக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால், புதுச்சேரி மதுபாட்டில் விற்பனையை தடுக்ககோரியும் மதுபாட்டில் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்யக்கோரியும் நேற்று முன்தினம் அப்பகுதி பெண்கள், மதுராந்தகம் - சூணாம்பேடு சாலையில் மறியலில் ஈடுபட் டனர்.
இதையடுத்து, மதுராந்தகம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி உறுதி அளித்ததை தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
மேலும், மதுபாட்டில் விற்பனை செய்தது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த துளசி(45) என்ற பெண்ணையும் போலீஸார் கைது செய்தனர். ஆனால், மது விற்பனை தொடர்வதாகக் கூறி கிராமப்பகுதி பெண்கள் 2-வது நாளாக நேற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திய மதுராந்தகம் போலீ்ஸார் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, மதுவிற்றதாக கைது செய்யப்பட்ட நபரின் உறவினர்கள் வழக்கத்தை விட அதிகமாக விற்பனை செய்து வருகின்றனர்.
போலீஸார் சிலரும் இதற்கு உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது. போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மதுராந்தகம் காவல் நிலையத்தை முற்றுகையிடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.