Published : 28 Oct 2013 10:49 AM
Last Updated : 28 Oct 2013 10:49 AM

திருமண உதவித் திட்டம்: ஒரு லட்சம் தங்க நாணயங்களை வாங்குகிறது தமிழக அரசு

திருமண உதவித் திட்டங்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசின் சின்னம் பொறித்த ஒரு லட்சம் தங்க நாணயங்களை வாங்குவதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

தமிழக அரசு சமூக நலத்துறை மூலம் 5 விதமான திருமண உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு உதவித் தொகையுடன் தாலிக்காக 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்துக்காக, ஒரு லட்சம் தங்க நாணயங்கள் வாங்குவதற்காக ஒப்பந்தங்கள் கோரி சமூக நலத்துறை இயக்குனர் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் ஒவ்வொரு தங்க நாணயமும் நான்கு கிராம் எடையுள்ளதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பந்த அறிவிப்பின்படி கன்னியாகுமரி, மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு 5,000 தங்க நாணயங்களும், சேலம் மாவட்டத்துக்கு 4,500 மற்றும் விழுப்புரம் மாவட்டத்துக்கு 4,200 தங்க நாணயங்களும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

இத்திட்டத்துக்கு தங்க நாணயங்கள் வழங்க விரும்பும் நிறுவனங்களின் ஆண்டு வருமானம், கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நிறுவனமும் பி.ஐ.எஸ். ஹால்மார்க் தரம் கொண்ட 25,000 நாணயங்களை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்யப்படும் தங்க நாணயங்களில் உத்தேசமாக சில நாணயங்களைத் தேர்வு செய்து அவற்றின் தரம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தரம் குறைந்த நாணயங்களை விற்பனை செய்த நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒப்பந்தப் புள்ளிகளை அனுப்ப நவம்பர் 11-ம் தேதி கடைசி நாள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x