Published : 22 Jun 2017 07:08 PM
Last Updated : 22 Jun 2017 07:08 PM

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரி மாணவர் கொலை; குற்றவாளிகளைக் கண்டறிய நடவடிக்கை தேவை: முத்தரசன்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருந்தியல் கல்லூரி மாணவர் யுவராஜியின் கொலைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டறிய நடவடிக்கை தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி மருந்தியல் கல்லூரியில், கல்லூரி விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு மருந்தியல் பயின்று வந்த பி.யுவராஜ் என்ற மாணவர் கடந்த 20-ம் தேதி அன்று மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

மாணவரின் தந்தையான திரு.கு.பரமசிவனை கடந்த 20-ம் தேதி மாலை 5 மணிக்கு தொடர்பு கொண்ட கல்லூரி விடுதிக் காப்பாளர், மாணவரின் உடல் நிலை மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளார். இரவு 7 மணிக்கு இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அந்த மாணவனுக்கு வயிற்று வலி இருந்ததாகவும், அதனால் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் வயிற்று வலி தாளாமல் லுங்கியில் தூக்குப் போட்டு தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்துறை பொய்யான முதல் தகவல் அறிக்கை தயாரித்துள்ளது.

தன் மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், கல்லூரி நிர்வாகம் அவரை அடித்துக் கொன்றுவிட்டதாகவும், மாணவரின் தந்தை மேல்மருவத்தூர் காவல்நிலையத்தில் தாக்கல் செய்த மனுவைப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர். மாறாக வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்டதாக ஒப்புக் கொண்டால் தான் உடல் கூராய்வு செய்து அவர் சடலத்தை ஒப்படைக்க முடியும் என்று காவல்துறை கூறியுள்ளது.

கல்லூரி, விடுதி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் ஒரு இறப்பு நிகழ்வில் கலந்து கொண்டது சம்பந்தமாக பிரச்சினை இருந்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவரின் செல்போனை கல்லூரி நிர்வாகம் பறித்துக் கொண்டதாகவும், தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் தெரிகிறது. கொடூரமான முறையில் கொலையுண்ட தன் மகனின் சடலத்தைக் கூட பெற முடியாமல் அவரின் குடும்பம் தவிக்கிறது. இது மனிதாபிமானமற்ற சட்ட விரோத நடவடிக்கையாகும்.

எனவே தமிழக அரசு இதில் தலையிட்டு, புலனாய்வு அதிகாரியை மாற்றி ஆதிபராசக்தி மருந்தியல் கல்லூரி மாணவர் யுவராஜியின் கொலைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x