

தமிழ்நாடு மின்வாரியத்தில் தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை ஏவிவிடப்படுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்கம் சார்பில், மின்வாரியத்தில் நடைபெறும் ஊழல்களையும், குறைபாடுகளையும், சுட்டிக்காட்டி பல இடங்களில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகிறது. குறிப்பாக மேட்டூர் 600 மெகாவாட், 840 மெகாவாட் மின்னுற்பத்தி நிலையத்தில் நடைபெறும் ஊழல்களையும், முறைகேடுகளையும் மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரபணி அமர்த்தவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி தமிழ்நாடு மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்கம் சார்பிலும், பேரவை நிர்வாகிகள் சார்பிலும் திரளான தொழிலாளர்கள் ஆதரவோடு 21.02.2017 ஆம் தேதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அங்கு நடைபெறும் ஊழல்களையும், முறைகேடுகளையும் சுட்டிக்காட்டியதை பொறுத்துக்கொள்ள முடியாத மின்வாரிய அதிகாரிகள், தமிழ்நாடு மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்க, மத்திய சங்க மாநில துணை தலைவர் N.செந்தில்குமாரை பழிவாங்கும் நோக்கத்தோடு திருநெல்வேலிக்கு மாற்றம் செய்து அவருடைய செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும், எங்கள் தொழிற்சங்க வளர்ச்சியினை தடுக்கும் விதத்திலும், தொழிலாளர் சட்டங்களை மதிக்காமல், தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
தமிழ்நாடு மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிற்சங்கம் சார்பிலும், பேரவை சார்பிலும் சட்ட ரீதியாக வழக்கு தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் 5.04.2017 ஆம் தேதியன்று இடமாற்றம் தடை உத்தரவையும், பணியமர்வு உத்தரவையும் மின்வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்தது, உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் காலம் தாழ்த்துவதை வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாக பணியமர்த்த வேண்டும், இல்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்பதோடு விட்டுவிடாமல், மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.