

மத்திய அரசின் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''மத்திய அரசின் இந்தி திணிப்பு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதை ஒருபோதும் ஏற்க முடியாது.
2017-ல் இந்தி மீண்டும் நேரடியாகவும், மறைமுகமாகவும் திணிக்கப்படுகிறது. இதை தமிழை அறிந்தவர்கள் மட்டுமல்ல, தமிழை தாய்மொழியாகக் கொண்ட யாரும் பொறுத்துக்கொள்ள ஏற்றுக்கொள்ள இயலாது.
இந்த நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஆங்கிலம் என்பது தொடர்பு மொழியாக நீடிக்கிற வரைக்கும்தான் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்குமான உறவு தடையின்றி இயங்கும் என்று எங்களைப் போன்றவர்கள் நம்புகிறோம்'' என்றார் வைரமுத்து.