

சென்னை ரயில்வே போலீஸ் கோட்டத்தில் 4 மாதங்களில் ரயில் பாதையை கடக்க முயன்ற 428 பேர் இறந்துள்ளனர். எனவே, ரயில் நிலையங்களில் இருந்து 300 மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென ரயில்வே துறையிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரயில் விபத்துகளால் ஆண்டுதோறும் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறப்பதாக தேசிய குற்றப் பதிவு காப்பகம் தெரிவித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு விதிகளை மீறி வாகனங்கள் மூலம் ரயில் பாதைகளை கடந்து செல்வது, செல்போன் பேசிக் கொண்டே பாதைகளின் அருகே நடந்து செல்வது, ரயில்களில் கூட்ட நெரிசலில் தவறி விழுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறப்பு அதிகரிக்கிறது.
அதிகபட்சமாக ஜோலார்பேட் டையில் 49 பேரும், எழும்பூர் மற்றும் கொருக்குப்பேட்டையில் தலா 45 பேரும், தாம்பரத்தில் 44 பேரும் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்த இறப்புகளில் ரயில் பாதையை கடக்க முயன்ற 428 பேர் இறந்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை கோட்டம் ரயில்வே போலீஸ் எஸ்.பி. விஜயகுமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சென்னை கோட்டம் ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுகாப்புப் படை இணைந்து ரயில் பாதைகளில் விதிமுறைகளை மீறுவோர் மீது வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடவ டிக்கை எடுக்கப்படுகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நன்கு படித்தவர்களும், வேலையில் இருப்பவர்களும் விதிகளை மீறி ரயில் பாதையை கடந்து செல்கின்றனர். ரயில் பாதையை கடந்து செல்லக்கூடாது என்ற ஒழுக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
சுற்றுசுவர்
சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் சென்னையின் பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர். ரயில் பாதை விபத்துகள் ரயில் நிலையங்களில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவுக்குள்தான் அதிகளவில் நடப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே, ரயில் நிலையங்களில் இருந்து 300 மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ரயில் நிலைய சுரங்கப்பாதைகள், மேம்பாலங்களைச் சீரமைத்து மக்கள் செல்லும் வகையில் வசதியை ஏற்படுத்த வேண்டு மெனவும் வலியுறுத்தப்பட் டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் ஒரே நாளில் 4 பேர் பலி
சென்னையில் ரயில் பாதையை கடக்க முயன்ற 4 பேர் நேற்று ஒரே நாளில் இறந்துள்ளனர்.
சைதாப்பேட்டை கிண்டி ரயில் பாதையை நேற்று கடக்க முயன்ற செல்வக்குமார் (38) என்பவர் ரயில் மோதி இறந்தார்.
இதேபோல், சைதாப்பேட்டையில் சுமார் 55 வயதுள்ள ஆண் ஒருவரும், மாம்பலம் ரயில் நிலையம் அருகே மற்றொருவரும் இறந்துள்ளனர். கடற்கரை ரயில் நிலையம் அருகே 30 வயதுடைய ஆண் ஒருவரும் ரயில் மோதி இறந்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.