Published : 28 Apr 2017 11:34 AM
Last Updated : 28 Apr 2017 11:34 AM

விவசாயிகளுக்கு திமுக இழைத்த துரோகங்களை பொது அரங்கில் விவாதிக்க தயாரா?- ஸ்டாலினுக்கு அன்புமணி சவால்

விவசாயிகளுக்கு திமுக இழைத்த துரோகங்களை ஒப்புக்கொள்ளா விட்டால் பொது அரங்கில் விவாதிக்க ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி பிரச்சினையில் திமுக செய்த துரோகங்களை பட்டியலிட்டு, இவற்றுக்கெல்லாம் காரணமான திமுக, விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடுவதாகக் கூறுவது நாடகம் என்று பாமக நிறுவனர் ராமதாஸும், நானும் குற்றம் சாட்டியிருந்தோம். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், 'உறங்குவது போல நடிப்பவர்களுக்கு சில உண்மை நிலவரங்கள்' என்ற தலைப்பில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உண்மை எப்போதும் சுடும்... குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்... திமுக மீது பாமக கூறிய குற்றசாட்டுகள் அனைத்தும் உண்மை என்பதால் தான் ஸ்டாலின் கடந்த ஆண்டு கருணாநிதி வெளியிட்ட அறிக்கையின் முன்னும் பின்னும் சில பத்திகளைச் சேர்த்து அவசரம், அவசரமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

மு.க. ஸ்டாலின் கூறுவதைப் போன்று, திமுக அளிக்கும் விளக்கத்தை ஏற்க மறுத்து உறங்குவதைப் போல யாரும் நடிக்கவில்லை. திமுக அளித்த விளக்கங்கள் உண்மையானதாகவும், நியாயமானதாகவும் இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தூங்குவதாக நினைத்துக் கொண்டு, பொய்களைக் கூறி உண்மையை மறைத்து விடலாம் என ஸ்டாலின் நினைப்பதால் தான் உண்மையை நினைவூட்ட வேண்டியிருக்கிறது.

காவிரி பிரச்சினையில் திமுக செய்த துரோகங்களில் முதன்மையானது 1924-ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை 1974-ஆம் ஆண்டு புதுப்பிக்காதது ஆகும். காவிரி நதிநீர் பகிர்வுக்கான உடன்பாடு நைல் நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். அதை முறைப்படி புதுப்பிக்க எந்தத் தடையும் இல்லை. ஆனாலும் அதை புதுப்பிக்காமல் விட்டுக் கொடுத்ததற்கு காரணம், கருணாநிதி மீது ஊழல் புகார் பட்டியல் என்ற கத்தி தொங்கிக் கொண்டிருந்தது தான் என்பதை அனைவரும் அறிவர்.

ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் கட்டும் பணி 1968-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அடுத்து வந்த ஆண்டுகளில் அந்தப் பணிகள் வேகம் பெற்றன. அப்பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி அப்போதே உச்ச நீதிமன்றத்தை அணுகி தடை பெற்றிருந்தால் அணைகளை தடுத்திருந்திருக்கலாம். ஆனால், கருணாநிதியோ, அண்ணா ஆட்சியில் ஒருமுறையும், தமது ஆட்சியில் 6 முறையும் கர்நாடகத்துடன் பேச்சு நடத்தி எந்த முன்னேற்றத்தையும் எட்ட முடியவில்லை. அதன்பின் மூன்று ஆண்டுகள் தாமதித்து 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் உச்ச நீதிமன்றத்தில் கருணாநிதி அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கையும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மிரட்டலுக்குப் பணிந்து திரும்பப் பெற்றார். இதைப் பயன்படுத்திக் கொண்டு மொத்தம் 4 அணைகளை கர்நாடகம் கட்டி முடித்துவிட்டது. காவிரியை பாலைவனமாக்க துணை போன இந்த செயலை துரோகம் என்று கூறாமல் வேறு எப்படி அழைப்பது?

நடுவர் மன்றம் அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு அனைத்துக்கட்சிக் கூட்டத்தின் முடிவுப்படிதான் திரும்பப் பெறப்பட்டது என்று கூறி அந்த பெரும் பாவத்திலிருந்து திமுக தப்பிவிட முடியாது. முதல்வராக இருந்த கருணாநிதி, எது தமிழகத்திற்கு நல்லது என்பதை சிந்தித்து முடிவெடுத்திருக்க வேண்டாமா? அவ்வாறு முடிவெடுக்காமல் வழக்கைத் திரும்பப் பெறப்பட வேண்டிய கட்டாயம் என்ன? கருணாநிதி அப்படி செய்ததால் தான் தமிழகத்தின் குடி முழுகிப் போய்விட்டது என்பதில் என்ன ஐயம்?

கருணாநிதி அரசு மட்டும் நடுவர் மன்றம் அமைப்பது குறித்த வழக்கை 1972-ஆம் ஆண்டு திரும்பப் பெறாமல் இருந்திருந்தால், 1990-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 18 ஆண்டுகள் முன்பாகவே அமைக்கப்பட்டிருந்திருக்கக் கூடும்; காவிரி பிரச்சினைக்கு கடந்த நூற்றாண்டிலேயே தீர்வு காணப்பட்டு, காவிரி பாசன மாவட்டங்கள் இன்று வளம் கொழிக்கும் மண்டலமாக மாறியிருக்கக் கூடும். தமிழக விவசாயிகள் டெல்லிக்கு சென்று பிரதமர் அலுவலகம் முன் ஆடைகளை களைந்து போராடும் அவலம் ஏற்பட்டிருக்காது. இதற்கெல்லாம் காரணம் 1972-ம் ஆண்டில் இந்திரா காந்தியின் நிர்பந்தத்திற்கு பணிந்து கருணாநிதி அரசு எடுத்த முடிவு தான் என்பதை ஸ்டாலின் மறுக்க முடியுமா?

திமுக அரசின் துரோகப் பட்டியல் இத்துடன் முடிந்துவிடவில்லை. காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான அமைப்பை விரைந்து உருவாக்கும்படி மத்திய அரசுக்கு 21.07.1998 அன்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அதன்படி இப்போது வலியுறுத்தப்படும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இணையான அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்தது. அப்படி ஒரு அமைப்பு இருக்கும்பட்சத்தில், நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்திருந்தால், கர்நாடகத்தில் உள்ள அணைகளை அந்த அமைப்பே எடுத்துக் கொண்டு தமிழகத்திற்கு நீதி வழங்கியிருக்கும்.

ஆனால், கருணாநிதியோ அப்போதைய கர்நாடக முதல்வர் ஜே.எஸ். பாட்டீலுக்கு ஆதரவாக செயல்பட்டு ஒன்றுக்கும் உதவாத காவிரி நதிநீர் ஆணையத்தை உருவாக்க ஒப்புக்கொண்டார். 1998 முதல் 2007 வரையிலான 10 ஆண்டுகளில் பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையத்தால் எத்தனை முறை தீர்வு கிடைத்தது என்பது மு.க.ஸ்டாலினுக்கு தெரியாததல்ல.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 05.02.2007 அன்று வெளியான போது தமிழகத்தை திமுக தான் ஆட்சி செய்தது. மத்திய அரசிலும் திமுக தான் முதன்மை பங்குதாரராக இருந்தது. தீர்ப்புக்கு பிறகு நான்கரை ஆண்டுகள் மாநிலத்திலும், ஆறரை ஆண்டுகள் மத்தியிலும் அதிகாரத்தில் இருந்த திமுக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என்பது தானே உண்மை.

ஆட்சியில் இருந்த போது எதையும் செய்யாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன்; பேச்சு வார்த்தை நடத்தினேன் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன பயன்? அதைத் தானே இப்போதுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் செய்து கொண்டிருக்கிறது. அப்படியானால், எடப்பாடி அரசும், திமுக அரசும் ஒன்று தான் என ஒப்புக்கொள்ள ஸ்டாலின் தயாரா?

1965-ம் ஆண்டில் அவினாசி- அத்திக்கடவு பாசனத்திட்டம் உருவாக்கப்பட்டு 52 ஆண்டுகள் ஆகும் நிலையில், திமுக தான் 21 ஆண்டுகள் ஆட்சி செய்தது. இந்தக்காலத்தில் இத்திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தாதது ஏன்? தாமிரபரணி- கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தை 2008-ஆம் ஆண்டில் அறிவித்த திமுக, அடுத்த 3 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொண்ட பணிகள் என்னென்ன?

பாலாற்றின் குறுக்கே கர்நாடகமும், ஆந்திரமும் 40க்கும் மேற்பட்ட அணைகளை கட்டியுள்ள நிலையில், அந்த இரு மாநிலங்களிலும் ஓடுவதை விட அதிக தூரத்திற்கு ஓடும் தமிழகத்தில் ஒரு தடுப்பணையையாவது திமுக அரசு கட்டியிருக்குமா? மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருந்த திமுக, வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து வழங்க வேண்டும் என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை செயல்படுத்த முயற்சி செய்யாதது ஏன்? மறைந்த அமைச்சர் ஏ. கோவிந்தசாமியின் கனவுத்திட்டமான நந்தன் கால்வாய்த் திட்டத்தை அவர் மறைவுக்குப் பிறகு 19 ஆண்டுகள் பதவியிலிருந்த திமுக செயல்படுத்தாதது ஏன்? என திமுகவுக்கான வினாக்கள் நீள்கின்றன.

மீத்தேன் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆய்வுக்காக மட்டும் செய்து கொள்ளப்பட்டது என்று ஸ்டாலின் அளிக்கும் விளக்கம் குழந்தைத் தனமானது அல்லவா? மீத்தேன் திட்டத்தைப் போன்று தான் நெடுவாசல் திட்டத்திற்கும் ஆய்வுக்கான உரிமத்தை திமுக அரசு வழங்கியது. இந்த இரு திட்டங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடாவிட்டால் அத்திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகியிருக்கும் என்பதை ஸ்டாலினால் மறுக்க முடியுமா? விவசாயிகளுக்கு திமுக செய்த துரோகங்களை முழுமையாக பட்டியலிட பக்கங்கள் தான் போதாது.

மாறாக, விவசாயிகளின் நலனுக்கான பயனுள்ள திட்டங்களையும், யோசனைகளையும் பாமக வழங்கி வருகிறது. வேளாண்மைக்கு 4 அமைச்கங்கள் உருவாக்கப்படும், நவீன வேளாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும், மாவட்டம் தோறும் வேளாண் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும், வேளாண் விளைபொருட்கள் மதிப்புக் கூட்டப்பட்டு அதிக விலைக்கு விற்கவும், ஏற்றுமதி செய்யவும் ஏற்பாடு செய்யப்படும், ரூ.50,000 கோடியில் நதிகள் இணைப்பு உள்ளிட்ட நீர்ப்பாசனப் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும், வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும், வேளாண் இடுபொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை விவசாயிகளின் நலனுக்காக பாமக தயாரித்து வழங்கியுள்ளது.

இதன்பிறகாவது விவசாயிகளுக்கு திமுக இழைத்த துரோகங்களை மு.க.ஸ்டாலின் ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறேன். ஒருவேளை இந்த விளக்கங்களை ஏற்க மு.க.ஸ்டாலின் மறுத்தால், இவை குறித்து அவருடன் பொது அரங்கில் விவாதம் நடத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன். மு.க.ஸ்டாலின் அத்தகைய விவாதத்தில் பங்கேற்க தயாரா? என்பதை அறிவிக்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x