

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் நாமக்கல்லைச் சேர்ந்த சுதன்தேவா அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு சுழற்கோப்பை மற்றும் வல்வில் ஓரி பட்டமும் வழங்கப்பட்டது.
கொல்லிமலையில் வல்வில் ஓரி 2-ம் நாள் விழாவை முன்னிட்டு செம்மேட்டில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாமக்கல் பிரிவு சார்பில் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சந்திரசேகரன், மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் செந்தில் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
10 வயதிற்கு குறைந்தோர், 14 வயது, 17, 20 மற்றும் 20 வயதிற்கும் மேற்பட்டோர் என, ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்டது. உட்டன், ரீகர்வ், காம்பவுண்ட் என மூன்று பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் நாமக்கல்லைச் சேர்ந்த சுதன்தேவா அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு சுழற்கோப்பையும், வல்வில் ஓரி பட்டமும் வழங்கப்பட்டது. மேலும், உட்டன் சுற்று 10 வயதுக்கு உட்பட்டோருக்கான சுற்றில் மாணவர் பிரிவில் காஞ்சிபுரம் ஆக்ரித், மாணவியர் பிரிவில் நாமக்கல் சங்கமித்ரா, 14 வயதுக்கு உள்பட்டோருக்கான மாணவர் பிரிவில் சேலம் பரத்வாஜ் நல்லதம்பி, மாணவியர் பிரிவில் விழுப்புரம் அன்நிஷிகா வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்.
அதேபோல் , 17 வயதுக்கு உள்பட்டோருக்கான மாணவர் பிரிவில் நாமக்கல் பூபாலன், மாணவியர் பிரிவில் காஞ்சிபுரம் கிருத்திகா, 20 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் ஈரோடு ரியாஸ் அகமது, பெண்கள் பிரிவில் நாமக்கல் ரஷிகா, 20 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் ஈரோடு சித்தேஸ்வரன், பெண்கள் பிரிவில் திருச்சி கார்த்தியாயினி ஆகியோர் முதல் பரிசை பெற்றனர்.
ரீகர்வ் சுற்றில் 10 வயதுக்கு உள்பட்டோருக்கான மாணவர் பிரிவில் காஞ்சிபுரம் யோகேஷ்குமார், மாணவியர் பிரிவில் நாமக்கல் ஜனனி, 14 வயதுக்கு உள்பட்டோருக்கான மாணவர் பிரிவில் நாமக்கல் அருணாசலம், பெண்கள் பிரிவில் காஞ்சிபுரம் சுவேதா, 17 வயதுக்கு உள்பட்டோருக்கான மாணவர் பிரிவில் சேலம் கார்த்திகேயன், மாணவியர் பிரிவில் சென்னை சுரேதா, 20 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் காஞ்சிபுரம் பிரதீபா, 20 வயதுக்கு மேற்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் திருச்சி சுசீலா ஆகியோர் முதல் இடம் பிடித்தனர்.
காம்பவுண்ட் சுற்றில் 10 வயதுக்கு உள்பட்டோருக்கான மாணவர் பிரிவில் சேலம் பெருமாள், மாணவியர் பிரிவில் நாமக்கல் மதுர வர்ஷினி, 14 வயதுக்கு உள்பட்டோருக்கான மாணவர் பிரிவில் நாமக்கல் சுதன்தேவா, 17 வயதுக்கு உள்பட்டோருக்கான மாணவர் பிரிவில் நாமக்கல் சிவக்குமார், 20 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் சேலம் மதன்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
உட்டன் சுற்றில் சேலம் பரத்வாஜ் நல்லதம்பி, ரீகவ் சுற்றில் காஞ்சிபுரம் சுவேதா, காம்பவுண்ட் சுற்றில் நாமக்கல் சுதன்தேவா ஆகியோர் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர். வெற்றி பெற்ற மற்றும் 2, 3ம் இடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் சி. டி. பெரியகருப்பன், வில்வித்தைப் போட்டி பயிற்சியாளர் ஆர். கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.