கர்நாடகத்தில் தனியார் கடையின் கட்டுப்பாட்டில் உள்ள மகனை மீட்டுத் தர வேண்டும்: கோவை காவல் ஆணையரிடம் தாய் மனு

கர்நாடகத்தில் தனியார் கடையின் கட்டுப்பாட்டில் உள்ள மகனை மீட்டுத் தர வேண்டும்: கோவை காவல் ஆணையரிடம் தாய் மனு
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள மிட்டாய் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனது மகன் கொத்தடிமையாக நடத்தப்படுவதாகவும், தனது மகனை மீட்டுத்தர காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கோரியும், கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் சிறுவனின் தாயார் நேற்று மனு அளித்தார்.

கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவர், மாநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜிடம் அளித்த மனு குறித்து கூறியதாவது:

எனக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இதில், இளைய மகன் பிரவின்குமார் (14), கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள ஒரு மிட்டாய் தயாரிக்கும் நிறுவனத்துக்கு எனது கணவர் வேலைக்காக அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், எனது கணவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக எனது மகனை அனுப்பி வைக்குமாறு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தோம். ஆனால், தகவலை கேட்ட பின்னரும் கடையின் நிர்வாகத்தினர், எனது மகனை அனுப்பி வைக்கவில்லை.

தந்தையின் இறுதிச் சடங்கில்கூட கலந்து கொள்ள முடியாதவாறு செய்துவிட்டனர். இதற்கு முன்னர் எனது பெரிய மகனின் திருமணத்துக்கு தகவல் கொடுத்தும் அனுப்பவில்லை.

இதனால், எனது மகனை அங்கு கொத்தடிமையாக நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் வந்துள்ளது. எனவே, எனது மகனை காவல்துறையினர் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் ஆணையர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in