

உலகில் முதல் முறையாக இளைஞரின் மூச்சுக்குழாயில் இருந்த பிளேடுகளை அகற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
செங்குன்றம் காரனோடை பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (25). சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர். காய்ச்சல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், 2 வாரத்துக்கு முன்பு சிகிச்சைக்காக ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்தார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனை செய்து பார்த்தபோது, அவரது கல்லீரலில் சீழ் கோர்த்திருப்பது தெரியவந்தது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்தனர். அப்போது மூச்சுக்குழாயில் பிளேடுகள் இருப்பதும், வயிற்றின் உள்ளே சிறுகுடலில் பிளாஸ்டிக் குச்சி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மயக்க மருத் துவத்துறை தலைவர் குமுதா லிங்கராஜ், டாக்டர்கள் சரவண குமார், கங்கா பரமேஸ்வரி மற்றும் அறுவை சிகிச்சைத் துறை டாக்டர்கள் பாலமுருகன், விக்னேஷ், பியூலா ஆகியோர் கொண்ட குழுவினர் முதலில் அறுவை சிகிச்சை செய்து கல்லீரலில் இருந்த சீழ்களை முழுவதுமாக அகற்றினர். அதன்பின் 2 நாள் தீவிர கண் காணிப்புக்குப் பிறகு, நவீன கருவியின் உதவியுடன் மூச்சுக் குழாயில் இருந்த பிளேடுகளை வெளியே எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 4 நாட்களுக்குப் பிறகு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து சிறுகுடலில் இருந்த பிளாஸ்டிக் குச்சியை அகற்றினர். இந்த மூன்று சிகிச்சைகளுக்குப் பிறகு, தற்போது காளிதாஸ் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மருத்துவமனை டீன் பொன்னம்பல நமச்சிவாயம், ஆர்எம்ஓ ரமேஷ், மயக்க மருத்துவத் துறை தலைவர் குமுதா லிங்கராஜ் ஆகியோர் நேற்று செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி:
காளிதாஸ் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், கையில் கிடைக்கும் பொருட்களை வாயில் போட்டுக் கொண்டுள்ளார். வாய்க்குள் செல்லும் எந்தப் பொரு ளாக இருந்தாலும், அது உணவுக் குழாய் வழியாக வயிற்றுக்குள் சென்றுவிடும். ஆனால் பிளேடுகள் எப்படி மூச்சுக்குழாய்க்குள் சென்றது என்பது தெரியவில்லை. ஒருவருக்கு ஒரே நேரத்தில் மூன்றுவிதமான அறுவை சிகிச்சைகள் என்பது மிகவும் சவாலாக இருந்தது. மூக்கு, காது, உணவுக்குழாய் போன்றவற்றில் இருந்த பட்டன், ஹேர்பின், கல், காசுகள் அகற்றப்பட்டுள்ளன. உலகில் முதல் முறையாக மூச்சுக்குழாய்க்குள் இருந்த பிளேடுகளை தற்போது அகற்றி இருக்கிறோம். இந்த 3 விதமான அறுவை சிகிச்சைகளை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு சுமார் ரூ.5 லட்சம் வரை செலவாகும். ஆனால், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.