நீதிமன்ற வழக்குகள் தொடர்பான செய்திகளில் வழக்கறிஞர், நீதிபதிகள் பெயரை வெளியிடுவது சரியா? தவறா? - ஓய்வு பெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கருத்து

நீதிமன்ற வழக்குகள் தொடர்பான செய்திகளில் வழக்கறிஞர், நீதிபதிகள் பெயரை வெளியிடுவது சரியா? தவறா? - ஓய்வு பெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கருத்து
Updated on
3 min read

தலித் சிறுவர்கள் 5 பேருக்கு எதிராக மதுரையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘நீதிமன்ற செய்திகளில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் பெயர்களை குறிப்பிடக் கூடாது. நீதிமன்றத்தின் பெயரை குறிப்பிட்டால் போதும்’ என அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர்(நிர்வாகம்) உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து 30 நாட்களுக்குள் முடிவெடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளனர்.

பொதுநல மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் விளம்பரத்துக்காக இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவர் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை அளித்துள்ளனர். மாவட்ட குழந்தைகள் நல குழுவின் அறிக்கையில், 5 தலித் சிறுவர்கள் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் நெருக்கடியால் அந்த சிறுவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.

‘நீதிமன்ற செய்திகளில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் பெயர்களை குறிப்பிடக் கூடாது. நீதிமன்றத்தின் பெயரை குறிப்பிட்டால் போதும்’என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ள உத்தரவு ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

கே.சந்துரு (முன்னாள் நீதிபதி)

எந்தெந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கட்சிக்காரர்களின் பெயரை வெளியிடலாம், வெளியிடக்கூடாது என்பதை நாடாளுமன்ற சட்டங்கள்தான் நிர்ணயம் செய்கின்றன. நீதிமன்றமே சென்சார் முறையை கொண்டுவருவது ஏற்புடையதல்ல. எய்ட்சால் பாதிக்கப்பட்டவர் மனுதாரராக வரும்போது அவரது பெயரை வெளியிட்டால் அவரது வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதற்காக பெயரை வெளியிட மறுக்கலாம். வழக்கறிஞர்களின் பெயரை வெளியிடலாமா, கூடாதா என நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

பொதுவெளியில் வழக்கு விசாரணை நடைபெறும்போது எந்தெந்த விஷயங்களை வெளியிடலாம், வெளியிடக்கூடாது என்பதை முடிவு செய்வது அந்த ஊடகவியலாளரே தவிர, நீதிமன்றங்கள் அல்ல. தீர்ப்பை எழுதிய நீதிபதியின் பெயரை வெளியிடுவது மரபு. சட்ட இதழ்களில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் பெயர் வெளியிடப்படுகிறது. ஒரு வழக்கில் பெரும்பான்மை தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பெயரும், சிறுபான்மை தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் பெயர்களையும் குறிப்பிட்டாக வேண்டும். இது தொடர்ச்சியாக இருந்து வரும் நடைமுறை.

டி.ஹரிபரந்தாமன் (முன்னாள் நீதிபதி)

கணினி யுகத்தில் நீதிமன்றத்தின் உத்தரவு ஒருவருக்கு உதவியாக இருக்கும் பட்சத்தில் வழக்கறிஞர், நீதிபதியின் பெயரை வைத்துதான் அந்த உத்தரவை இணையத்தில் எடுக்க முடியும்.வழக்கறிஞரின் பெயரையும், நீதிபதியின் பெயரையும் செய்திகளில் வெளியிடுவது பொதுமக்களுக்கு பயனளிக்கிறது. வழக்கறிஞர்கள்,நீதிபதிகளை அடையாளம் காண்பதற்கு அவர்களின் பெயர்கள் தேவை. வழக்கறிஞர்கள் கண்டிப்பாக பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யலாம்.ஆனால் அதில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களின் தனிநலன் கண்டிப்பாக இருக்கக்கூடாது. பொதுநலன் வழக்குகளை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்யாவிட்டால், வேறு யார் தாக்கல் செய்வார்கள்.

ஆர்.காந்தி (உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்)

நீதிபதியின் பெயரையோ, வழக்கறிஞரின் பெயரையோ ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று சட்டத்தில் நேரடியாக விதிகள் இல்லை. ஆனால்,ஒரு உத்தரவை பிறப்பிக்கும் நீதிபதி மற்றும் அந்த உத்தரவுக்காக வாதிடும் வழக்கறிஞரின் பெயரை ஊடகங்களில் பிரசுரிப்பது என்பது ஒரு வகையான சுயவிளம்பரம்தான். ஆரம்பகாலங்களில் உத்தரவை பிறப்பிக்கும் உயர் நீதிமன்றத்தின் பெயர் மட்டும்தான் வருமே தவிர, அந்த உத்தரவை யார் பிறப்பித்தது? யார் வாதிட்டார்கள்? என எந்தச் செய்தியும் வராது. ஆனால்,சுயவிளம்பரம் தேடும் சில வழக்கறிஞர்கள் தங்களது பெயரை செய்தித்தாள்களில் வரவைக்கின்றனர். உண்மையாக வழக்கை நடத்துபவர்களுக்கு சுயவிளம்பரம் தேவைப்படாது. இதைத்தான் நீதிபதியும் தனது உத்தரவில் பிரதிபலித்துள்ளார்.

கே.எம்.விஜயன் (உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்)

நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கும்போது, அந்த தீர்ப்புக்காக யார் வாதிட்டார்களோ அவர்களின் பெயர், நீதிபதியின் பெயரை ஊடகங்களில் பிரசுரிப்பது தவறு கிடையாது. இது நீதிமன்ற தகவலை பொதுமக்களிடம் கொண்டுசேர்க்கும் ஒரு முறைதான். அதேநேரத்தில், விளம்பரத்துக்காக ஒரு வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார் என நீதிபதி அறிந்தால், அந்த வழக்கறிஞரின் பெயரையோ, தன்னுடைய பெயரையோ வெளியிடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க முடியும்.அவ்வாறு உத்தரவு பிறப்பித்தால் , கண்டிப்பாக பெயர்களை பிரசுரிக்கக்கூடாது. அதே நேரத்தில் வழக்குக்கு தொடர்பில்லாமல் தன்னுடைய பெயரையோ,வழக்கறிஞரின் பெயரையோ ஊடகங்கள் பிரசுரிக்ககூடாது என பொதுவான ஒரு உத்தரவு பிறப்பித்தால் அதை ஊடகங்கள் பொருட்படுத்தத் தேவையில்லை.

வீரா. கதிரவன் (உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்)

நீதி பரிபாலனத்தில் விளம்பரம் தேடக்கூடாது.சிகிச்சை அளித்த மருத்துவரை வெளியில் சொல்வதில்லை. அப்படியிருக்கும்போது வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் பெயரையும் வெளியில் சொல்ல வேண்டியதில்லை.

அ.அருள்மொழி (உயர் நீதிமன்ற வழக்கறிஞர்)

வழக்கறிஞர்களின் பெயரை செய்தியில் குறிப்பிடுவது என்பது ஒரு வகையில் ஊடகங்களின் முடிவு. எனினும், அவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டால் அது அவர்களுக்கு விளம்பரமாகும் என்பது உண்மைதான். சில நேரங்களில் முக்கியமான வழக்குகள் நடக்கும்போது, அந்த வழக்கை யார் நடத்தினார்கள் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பார்கள். எனவே, அதைச்சொல்லவேண்டியது ஊடகங்களின் கடமை.

எம்.ராதாகிருஷ்ணன் (உயர் நீதிமன்ற வழக்கறிஞர்)

நீதிமன்ற தீர்ப்பை வெளியிடும்போது நீதிபதி, வழக்கறிஞர் பெயர்களைகண்டிப்பாக குறிப்பிட வேண்டும். ஏனெனில், தீர்ப்பின் ஒரு அங்கம் அது. அதைவெளியிடாமல் இருப்பதுதான் தவறு. எனவே, உயர் நீதிமன்றத்தின் இந்ததீர்ப்பு உடனடியாக திருத்தப்பட வேண்டிய ஒன்று. மேலும், தீர்ப்பில் உள்ள பெயர்களை வெளியிடும்போது, அதேபோன்ற மற்றொரு வழக்கைகொண்டு வரும் கட்சிக்காரர்களுக்கு அது உதவியாக இருக்கும். அவர்கள் அந்த தீர்ப்பை எளிதாக தேடுவதற்கும் அது வழிவகுக்கும்.

கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்)

வழக்கறிஞர்கள், நீதிபதிகளின் பெயரை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என உத்தரவிடுவது ஊடகங்களின் உரிமையை மறைமுகமாகப் பறிக்கின்ற, ஜனநாயகத்துக்கு முரணான ஒன்று. அந்த உத்தரவை உயர் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in