Published : 13 Mar 2014 06:50 PM
Last Updated : 13 Mar 2014 06:50 PM

சிறிய பஸ்களில் இலை சின்னத்தை மறைக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

தமிழக அரசின் சிறிய பஸ்களில் இடம்பெற்றுள்ள இலைகள் சின்னத்தை மறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நிதிமன்றத்திடம் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அம்மா குடிநீர் பாட்டில் மற்றும் அரசு சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை மறைப்பதற்கு உத்தரவிடக் கோரி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், மனுதாரர் கோரிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக, சிறிய பஸ்களில் வரையப்பட்டு இருக்கும் இரட்டை இலை போன்ற இலை சின்னங்களை மறைக்க வேண்டும்; மிக்ஸி, கிரைண்டர் விநியோகம் செய்வதை நிறுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக அவர் கூறினார்.

அத்துடன், அம்மா உணவகம், அம்மா குடிநீர் பாட்டில்களில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை மறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 'அம்மா' என்ற சொல் பொதுவானது என்பதால், அதனை மறைக்கத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள நுழைவு வாயில் பகுதி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக அதாவது 2012ஆம் ஆண்டிலேயே கட்டப்பட்டுவிட்டதால் அந்த விவகாரத்தில் தலையிட தேவையில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளதாக வழக்கறிஞர் ஜி ராஜகோபாலன் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை, பஸ்களில் வரைந்துள்ள இலைச் சின்னங்களை மறைக்க வேண்டும் என்ற உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி சிறிய பஸ்களில் உள்ளது இரட்டை இலை சின்னம் அல்ல என வாதம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக, மு.க.ஸ்டாலின் தனது மனுவில், 'தமிழக அரசின் சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள அதிமுக-வின் கட்சி சின்னமான இரட்டை இலை முத்திரைகளை அகற்றக் கோரிய வழக்கு ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அரசு சொத்துக்களில் அதிமுகவின் சின்னம் மற்றும் முதல்வரின் உருவப்படங்கள் இருப்பதால் அது மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

இதனால், அரசு சிறிய பஸ், குடிநீர் பாட்டில்களில் உள்ள இரட்டை இலை மற்றும் முதல்வர் புகைப்படத்தை அகற்ற உத்தரவிடுமாறு தேர்தல் ஆணையத்திடம் இரண்டு முறை புகார் அளித்துள்ளேன். எனவே, அரசு தண்ணீர் பாட்டில் மற்றும் அரசு சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை மறைப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x